Sunday 28 August 2016

திராவிடம்: தாயுமானவர் கையாளும் சொல்! - அரிகரன்

முகநூலில் திரு. அரிகரன் எழுதிய கட்டுரை:


1705ம் ஆண்டு பிறந்து 1742ல் மறைந்த தாயுமானவர் சாமிகள் திராவிடம் என்ற வார்த்தையை தனது பாடல்களில் உபயோகிக்கிறார். இவருக்கும் கால்டுவெல்லுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கால்டுவெல் 1850களில் தான் வருகிறார். அதாவது ஒரு நூற்றாண்டு கழித்தே கால்டுவெல் வருகிறார். தாயுமானவர் தனது பாடலில் திராவிடம் என்ற சொல்லை தமிழுக்கு நிகராகவே பயன்படுத்துகிறார்.
_-----------------
கல்லாத பேர்களே நல்லவர்க ணல்லவர்கள் ;
கற்றுமறி வில்லாதவென்
கர்மத்தை என்சொல்கேன் ? மதியையென் சொல்லுகேன் ?
கைவல்ய ஞான நீதி
நல்லோ ருரைக்கிலோ கர்மமுக் கியமென்று
நாட்டுவேன் ; கர்மமொருவன்
நாட்டினா லோபழைய ஞானமுக் கியமென்று
நவிலுவேன் ; வடமொழியிலே
வல்லா னொருத்தன்வர வுந்த்ரா விடத்திலே
வந்ததா விவகரிப்பேன் ;
வல்லதமி ழறிஞர்வரி னங்ஙனே வடமொழியின்
வசனங்கள் சிறிதுபுகல்வேன் ;
வெல்லாம லெவரையு மருட்டிவிட வகைவந்த
வித்தையென் முத்திதருமோ ?
வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
வித்தக சித்தர்கணமே!
- சித்தர்கணம்
இதில் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார், “வடமொழியிலே வல்லா னொருத்தன்வர வுந்த்ரா விடத்திலே வந்ததா விவகரிப்பேன்” என்று வடமொழியில் வல்லவன் ஒருவன் வருவான் என்றால், தமிழிலே சிறப்பு அதற்கு முன்பே வந்துவிட்டது என்பேன் என்கிறார். இதிலிருந்து நமக்கு தெளிவாகத் தெரிவது திராவிடம் என்ற வார்த்தை கால்டுவெல்லோ, இல்லை அயோத்திதாச பண்டிதரோ, இல்லை பெரியாரோ கண்டுபிடித்தது இல்லை. திராவிடம் என்பது பரவலாக தமிழைக் குறிக்க அனைவராலும் பயன்படுத்தப்பட்ட வார்த்தையே. இந்த வார்த்தையை தெலுங்கிற்கும், கன்னடத்திற்கும் ஏன் மலையாளத்திற்கும் தாரை வார்க்கும் முயற்சியையே இன்றை தமிழ்த் தேசியர்கள் செய்து வருகின்றனர். பெரியாரும் திராவிடம் என்ற வார்த்தையை தமிழுக்கு நிகராகவே உபயோகித்தார் என்பதும், ஆந்திரர்கள், கர்நாடகத்தவர்கள், மலையாளிகள் மீது நன் மதிப்பையோ கொண்டிருந்தவர் இல்லை என்பதும் உண்மை.