Monday 1 November 2021

தமிழ் நிலமும் 'தலைமைச் செயலகமும்' தமிழ் நாடும்!

கி. மு. 1200 வரை, தென் குமரிக்குத் தெற்கே உள்ள கபாடபுரம் முதலாக வடக்கில் உள்ள பனிமலை வரை தமிழ் பேசும் நிலப் பரப்பாகத்தான் இருந்தது. (It is surmised not incorrectly that all the languages of India could be traced to one original family of language, and this family cannot be Indo- Germanic (Indo- Aryan) as is assumed, but native to the soil having its birth in Neolithic times, if not earlier. This is certainly true if we make a comparative study of the North- Indian and South- Indian vernacular dialects, for, in both, we see the same fundamental grammatical structures” (V. R. Ramakrishna Dikshidar-Pre- historic South India- Page 179). “These facts can only prove that people speaking dialects allied to Tamil once inhabited the whole of India” (P.T.Srinivasa Iyengar-The History of Tamils page 2).

மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்கள் (பின்னாளில் தங்களை பிராமணர்கள் என்று சொல்லிக் கொண்டவர்கள்) இந்தத் துணைக் கண்டத்தில் நுழைந்த பிறகு மொழித் தாக்குதல்கள் நடைபெறலாயின. இந்த துணைக்கண்டத்திற்குள் நுழையும் வரை எழுத்து என்ற ஒரு அமைப்பையே  அறியாத ஆரியர்கள் இங்கு இருந்த தமிழ் மக்களிடமிருந்து எழுத்துக் கலையைக் கற்று கொண்டார்கள். (“We have no evidence to show that the Vedic people had any knowledge of writing (or building cities) as the Indus Valley people had.” (Surendaranath Dasgupta -The Cultural Heritage of India – Vol.3 – The Ramakrishna Mission Institute of Culture)

அவர்களுடைய வேதகால வேதமொழியில் உள்ள சொற்களும் இங்கு பேசப்பட்ட தமிழும் கலந்து பல திரிபு மொழிகள் உருவாகின. (Owing to the wide prevalence of the union of Aryan males with non-Aryan females, the speech (as well as the social and religious life) of the Aryan people began to be modified very early on Indian soil”. There took place “the borrowing of the cerebral consonantal sounds from non- Aryan speech” (Dinesh Chandra Sirkar-ibid-page108). அவை பாலி, மைதிலி, ஆர்தமாகதி, மாகதி, சௌரசேனி, போன்றவையாகும்.

மகாவீரர் மற்றும் புத்தர் காலத்தில் ஆரியர்களுடைய வல்லாதிக்கச் செயல்பாடுகள் தாக்கப்பட்டுத் தகர்க்கப் பட்டதால் அரண்டு போன ஆரியர்கள் தங்கள் இனத்தின் அடையாளத்தைப்  பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால்  தங்களுக்காக ஒரு மொழி தேவை என்ற சிந்தனையால் உந்தப்பட்டு புதிதாக ஒரு மொழியை உருவாக்கினார். அதுவே சமஸ்கிருதம் என்று அவர்களால் பெயரிடப்பட்டது. சமஸ்கிருதம் என்றால் தெளிவாக உருவாக்கப்பட்டது (Perfectly  created) என்று பொருள். அவ்வாறு தங்களுக்கான ஒரு மொழியை எழுத்து வடிவத்தால்  உருவாக்கிக் கொண்டபின் அதற்கு முன்பு பேசப்பட்டு வந்த பாலி,   மாகதி,   மைதிலி, முதலான மொழிகளூக்கு  பிராகிருதம் என்று பெயரிட்டு அழைக்கலாயினர். பிராகிருதம் என்றால் முன்பே உருவாக்கப்பட்டவை (Previously  created) என்று பொருளாகும்.

இதன் காரணமாக பனிமலை வரை பரவியிருந்த தமிழ்பேசும் நிலப்பரப்பு விந்திய மலைக்கு தெற்கு பகுதிகக்கு மட்டுமாகக் குறைந்தது. வட பகுதியில் நடந்த இந்தத் தாக்குதல்கள் ஒருபுறம் இருக்க, தென்பகுதியில்,  இயற்கைச் சீற்றத்தால், பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடு கொடுங்கடலால்  விழுங்கப்பட்டது (சிலப்பதிகாரம்).  இதனால் தமிழ் நிலத்தின் பரப்பளவு தெற்கிலும் குறைந்தது.

தொடர்ந்து வடக்கில், மகாராஷ்ட்ரி என்ற திரிபு மொழியால் (one of the Prakrits) தமிழ் பேசிய நிலத்தின் பரப்பு மேலும் குறைந்தது. பின்னர் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டில் பிராமணர்களால் சமஸ்கிருத எழுத்து அமைப்பில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட தெலுங்கு மொழியால் தமிழ் நிலத்தின் எல்லை மேலும் சுருங்கியது.

பின்னர் பத்தாம் நூற்றாண்டில் அதே போலக் கன்னடம் என்ற மொழி உருவாக்கப்பட்டு தமிழ் பேசும் நிலத்தின் பரப்பளவு மேலும் குறைக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் வேங்கடமும் தென்குமரியும் தமிழ் நிலத்தின் எல்லைகளாக இருந்தன. பின்னர் பதினொன்றாம் நூற்றாண்டில் மலையாளம் என்ற மொழி உருவாக்கப்பட்டு தமிழ்பேசும் நிலத்தின் பரப்பு மேலும் குறுக்கப்பட்டது.

பின்னர் 1956 ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்க நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன. அப்போது மற்ற மாநிலங்கள் பறித்து எடுத்துச் சென்றது போக மிச்சமிருந்த நிலம்தான் தமிழ் நிலமாக 01.011.1956 முதல் இன்று வரை உள்ளது.

இந்த நிலப்பரப்பை இன்னும் குறைப்பதற்கு சதுர்வர்ணக் கொத்தடிமைகள் இன்றும் சதி செய்துவருகின்றனர். பொன் . இராதாகிருஷ்ணன் என்ற பா. ஜ. க. காரர் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ் நாட்டுடன் சேர்ந்துள்ளதைப் பற்றி மிகவும் வருந்துகிறார். இது கேரளாவுடன் இணைந்திருக்கவேண்டும் என்கிறார்.



ஆக, 01.11.1956 நிகழ்வில் தமிழர்கள் கொண்டாடுவதற்கு ஏதும் இல்லை. தமிழ் பேசும் நிலப்பகுதியில் 3000 ஆண்டுகளாகத் தொடர்ந்து நாம் நமது நிலங்களை இழந்து வந்திருக்கிறோம் என்பதுதான் வரலாறு காட்டும் உண்மையாகும்.

தமிழர்களுக்கான நிலப்பகுதி தமிழால் என்றைக்கு இறுக்கி நிலைப்படுத்தப் பட்டதோ (Process  of  consolidation) அந்த நாள் மட்டுமே கொண்டாடப் படவேண்டிய நாள்.

தமிழுக்கும் தமிழகத்திற்கும் மறுமலர்ச்சிகக்கு வித்திட்ட ஆண்டு 1967 தான். தமிழின எதிரிகளும் துரோகிகளும் கண்டு அஞ்சுவது தமிழ் நாட்டின் நிலப்பரப்பு பற்றி அல்ல. தமிழின அடையாளத்தைக் கண்டுதான் எதிரிகள் அஞ்சுகின்றனர்.

தமிழர்கள் அந்த அடையாளத்தைப் போராடி வென்றெடுத்தது தமிழ் நாடு என்று தமிழக்கத்திற்குப் பெயர் சூட்டப்பட்ட 18.07.1968 அன்றுதான். அன்றுதான் தமிழ் நாடு பிறந்தது. தமிழர்களின் வெற்றி நாள் அது.

தமிழ்நாடு என்று பெயர் வைக்கக் கோரி சங்கரலிங்கனார் உண்ணா நோன்பு நோற்று 13.10.1956 அன்று உயிர் துறக்கிறார்.


 இந்த மாநில அரசு, காங்கிரஸ் அரசு, அசையவில்லை. ஏனெனில், டெல்லியில் ஆரியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த காங்கிரஸ் தர்பார் அந்தப் பெயருக்கு எதிரியாக இருந்தது. அந்தப் பெயரைக்கண்டு அஞ்சியது. மாநில அரசு அன்று அந்த டெல்லி தர்பாரின் கைப்பாவையாக மட்டுமே இருக்க முடிந்தது. தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி என்ற பெயரில் காலங்காலமாக, உரிமைப் போராட்டத்தின் போது செயல்பட்டு வந்த தமிழ் நாட்டுக் காங்கிரஸ் காரர்களைப் பயன்படுத்திக்கொண்ட வட இந்தியர்கள், 1947 க்குப் பின்னர், அவர்களை அவமதிக்கத் தொடங்கினர். தமிழ் நாடு என்று இந்தத் தமிழ் நிலத்திற்குப் பெயர் வைப்பதை எதிர்த்தனர். 

தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதற்காக, 1962ல் டெல்லி பாராளுமன்றத்தில் வைக்கப்பட்ட சட்ட முன்வரைவு வட இந்தியர்களால் தோற்கடிக்கப் பட்டது. பின்னர் 1964 ல், இங்குள்ள சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட சட்ட முனவரைவும் வடவர்களின் அடிமைகளாக இங்கே இருந்த காங்கிரசுக் காரர்களாலேயே தோற்கடிக்கப்பட்டது.

தி. மு. க. 1967 ல் ஆட்சிக்கு வந்த பின்னர், 14.04.1967 அன்று கோட்டையில் முதலில் தமிழில் ‘தலைமைச் செயலகம்’ எனப் பெயர்ப் பலகை வைக்கப் பட்டபோது தமிழகத்தில் அது மிகப் பெரும் உணர்ச்சி அலைகளை ஏற்படுத்தித் தமிழர்களுக்குப் புத்துணர்வு ஊட்டிப் புளகாங்கிதம் அடையச் செய்ததை அன்றைய காலத்தில் வாழ்ந்தவர் அனைவரும்அறிவர்.


இதனைத் தொடர்ந்து தமிழ்ச் சொல்லாட்சிகள் பெரும் அளவில் செய்யலாக்கப்பெற்றன. ‘சபாநாயகர்’ அவைத்தலைவர் ஆனார்; ‘மகா கனம் பொருந்திய’ என்பது ‘மாண்புமிகு’ என்று ஆனது; எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது நனவாக்கப் பட்டது. தமிழ் வளர்ச்சித் துறை உருவாக்கப்ப்பட்டது. ‘தாசில்தார்’ வட்டாட்சியர் ஆனார்; RDO கோட்டாட்சியர் ஆனார்; ஜில்லா கலெக்டர் மாவட்டாட்சியர் ஆனார்; 'குறளகம்' உருவானது; 'எழிலகம்' உருவானது. தமிழில் அலுவலகப்பணி செய்யும் அரசு ஊழியர்களுக்கு விருதுகள் கொடுக்கப்பெற்றன. 

பின்னர். சட்டமன்றத்தில் 18.07.1968 லும் பாராளுமன்றத்தில் 23.11.2918 லும் தமிழகத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைக்கும் தீர்மானம் நிறைவேறியது. அன்றைய 'தலைமைச் செயலகம்', 'தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்' என்றாகி மிளிர்ந்தது. 


பின்னர் 01.12.1968 ல் நடைபெற்ற கொண்டாட்ட விழாவில் அண்ணா சங்கரலிங்கனாரின் ஈகத்தை நினைவு கூர்ந்து நன்றியும் வணக்கமும் தெரிவித்தார். மூவாயிரம் ஆண்டுகளாக பலவித ஆக்கிரமிப்புக்களுக்கு ஆளாக்கப்பட்டுக்கொண்டிருந்த தமிழினம், 1956 வரை நிலங்களை இழந்துகொண்டேயிருந்த  தமிழினம் பெற்ற முதல் வெற்றி 18.07.1968 அன்று, தமிழ் நிலம், தமிழ்நாடாகப் பரிமளித்த நாளேயாகும். அதுவும் மக்களாட்சி முறை வந்தபின், மக்களாட்சி முறையினால், பெற்ற பெரு வெற்றி.  தமிழ்நாடு பிறந்த நாள் அதுவே.

1965 முதல் தமிழின எழுச்சியைக் கண்டிருந்த வடவர்கள் தங்களது சதிச் செயல்களை அன்றைய காலகட்டத்தில் நிறுத்திக் கொண்டனர். தமிழ் மக்களுடைய எண்ணம், விருப்பம், ஆகியவற்றைத்  தமிழ் மக்கள் நிறைவேற்றிக்கொள்ள வடவர்கள் தடையாக இருக்க முடியாது என்று வடவர்களுக்கும், இங்கிருந்த தமிழ்த் துரோகிகளுக்கும் தமிழ் மக்கள் உணர்த்திய நாள் 18.07.1968.

இன்றும் காவிக் கொடியோர் கூட்டத்தில் சிக்கிக் கொண்டுள்ள தமிழ் நாட்டு அடிமைகள், பா. ஜ. க. எதற்காகத்  தமிழ் நாடு என்னும் பெயரை தட்சிணப் பிரதேசம் என்று மாற்ற முனைகிறது என்பது பற்றி யோசிப்பதில்லை. யோசிக்கும் தமிழர்கள்தான் காவிக் கொடியோர் கூட்டத்தில் சேரவே மாட்டார்களே.

தமிழனின் உணர்வையும் விருப்பத்தையும் தமிழனால். தன்னுடைய வழிவினால், அவனே நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்பதைத் தமிழன் உலகுக்கு உணர்த்திய நாள் 18.07.1968. தமிழர்களின் எதிரிகள் அஞ்சுவது 01.11.1956 ல் நடந்த நிகழ்வு பற்றி அல்ல; 18.07.1968 ல் நடந்த நிகழ்வு பற்றித்தான்.

எதிரியே மிகச் சிறந்த ஆசான் என்பது பழமொழி. எதிரியின் செயல்களைக் கூர்ந்து கவனித்தாலே, தமிழர்களுக்கு முகாமைத்துவம் வாய்ந்த நாள் எது என்பது எளிதில் விளங்கிவிடும். 

உலகில் பல பகுதிகளில் இன வேறுபாடு காரணமாகப் பல போர்களும் போராட்டங்களும் நிகழ்ந்துள்ளன. ஆனால், இந்தத் துணைக்கண்டத்தில், தமிழர்கள் எதிர் கொள்ளும் எதிரிகள் சதிச் செயல்கள் மூலமாகவே தங்கள் வேலைகளைச் செய்து பழக்கப்பட்ட சதிகாரர்கள். காலங்காலமாகப் பஞ்சமா பாதகங்களைத்  தொடர்ந்து செய்துவருபவர்கள்.

அவர்களின் சதிகளிலிருந்து தமிழையும், தமிழ் நாட்டையும் காப்பதற்கு, தமிழர்கள் எழுச்சியோடு போராடி, எதிரிகளை வென்று, தமிழ்நாடு என்ற நமது அடையாளத்தை மீட்டெடுத்து  (The date of completion of the process of consolidation) இறுக்கி நிலைப்படுத்திய  ஜூலை 18 ஆம் நாளே வெற்றி நாளாகக் கொண்டாடப் பெறவேண்டிய நாள். 

 வெல்க தமிழ் நாடு! வெல்க அறம் !! வெல்க மாந்த நேயம்!!!


பி. கு: 1974 & 1976 ல் கச்சத்தீவை மத்திய அரசு அதிகாரிகள் சிங்களர்களுக்கு ஆதரவாக சதிசெய்து தமிழர்களிடமிருந்து பறித்துக் கொடுத்தது தனி வரலாறு.