Sunday, 13 December 2020

இறந்துவிட்டேன் !

 


(1)

இறந்துவிட்டே னெனையழைத்துச் சென்றா ராங்கே 

எமதர்மன் வாஎன்றான்! எதிரில் நின்றேன்!

பிறந்துவிட்ட நாள்முதலாய்ப் பூலோ கத்தில் 

பெருஞ்செயல்நீ  செய்ததுதா னென்ன வென்றான்.

அறுந்துவிட்ட நூல்கொண்ட பட்டம் போல 

அரும்பொருளை மேன்மேலும் குவித்த தாலே 

சிறந்துபட்ட வாழ்க்கைநான் வாழ்ந்தே னென்று 

செம்மாந்த மிடுக்கோடு பேசலா னேன்!


(2)

பெரும்பணக்கா ரன்வீட்டிற் பிறந்த தாலே 

பிணிகவலை எதுவுமிலை வளர்ந்த காலை

அரும்பிவரும் இளம்பருவத் தென்றன்த ந்தை 

அவருடைய வணிகத்தில் இழுத்து விட்டார்

விரும்பியவை குறுக்குவழி தனிலே சென்று   

வெல்லு;அறம் பாராதே என்று ரைத்தார்    

சுரும்பெனநா னுழைத்துஅவர் வழியிற் சென்று

சுற்றியுள தனைத்துமென தாக்கிக் கொண்டேன்!


(3)

விந்தியசாத் பூராபோல் மலைக ளோடு 

விலையில்லாக் கனிமங்கள் உள்ள காடு 

சிந்துமுதல் பொருணை வரை தரையி லோடு 

செவ்விளநீர் போன்ற வருந்தண்ணீ ரோடு 

முந்திசெலும் வானூர்தி நிலையத் தோடு

முன்பின்னாய்ச் செல்லுதொடர் வண்டி யோடு 

இந்தியநா டேயெனக்குச் சொந்த மாக

எல்லோரும் எனக்கடிமை யாகி நின்றார்!

(4)

அதிகாரத்தில் இருக்கும் அமைச்ச ரெல்லாம்  

அவர்க்கான விலைதரவும் தம்மை விற்பார்.

விதியேது  இருந்தாலும் அவை  திரிக்கும் 

விலைமாத ரானபல அலுவ லர்கள்  

சதிசெய்து நமக்குதவி செய்து வைப்பார்

சட்டம்நான் வைத்ததுதான்;  எளிய மக்கள்

பொதிதன்னைச் சுமக்கின்ற கழுதையாகப் 

பொழுதெல்லா மெனைவியந்தென் சுமைசுமப் பார். 

(5)

ஊடகங்கள் அத்தனையும் கைக்குள் கொண்டேன் 

உண்மைகளைத் திரித்துலகை யாட்டி வைத்தேன் 

நாடகந்தான் பூவுலகம் என்றார் அந்த   

நாடகத்தை நானியக்க லானேன்; வென்றேன்! 

மூடர்களாய்ப் பொதுமக்கள் தம்மை ஆக்கி    

முட்டாள மைச்சர்களைக் கைக்குள் போட்டு 

கேடுகேட்ட அதிகாரிக் கூட்டத் திற்கு  

கையூட்டு தந்தெனது  செயல் முடித்தேன். 


(6) 

ஒன்றேதா னங்கெனக்குக் கவலை யெல்லாம்

உலகினிலே பெரியபணக் கார னாக 

என்றேனும் வரவேண்டு மென்ற நோக்கில் 

எல்லாச் சட்டங்களையும் எனக்கு ஏற்ற 

தொன்றாக ஆக்கிதரும் சிறிய கூட்டம் 

துப்பறியும் துறையினைத் தன் கையிற்கொண்டு

என்றுநினைத் தாளுமெனை வீழ்த்து தற்கு 

ஏற்றபடி உளவறிந்து வைத்தி ருப்பார். 


(7)

என்றெல்லாம் நான்சொல்ல எமன் நிறுத்தி 

‘எவ்வளவு பெரியவன்நீ என்றா கேட்டேன்?

நன்றான பெரியசெயல் என்ன செய்தாய்  

நாடினையோ எளியர்நலங் காப்ப தற்கு?’

என்றென்னைக் கேட்டிடயா னில்லை என்றேன்.

எனக்கெளியோர் பற்றிகவல் இல்லை என்றேன்

குன்றன்ன பணம்கண்ட தாலேசொர்க் கம் 

கொடுஎன்றேன்; புன்னகைத்தான்; நரகம் தந்தான்! 




Saturday, 24 October 2020

திருமாவளவன் Vs. ஸ்ரீல பிரபுபாத

அம்மாஞ்சி: அத்திம்பேர், அத்திம்பேர், பார்த்தேளா? திருமாவளவன் மேல வழக்கு போட்டுட்டாங்க. பெண்களை  அவர் இழிவுபடுத்தியதாக.

அத்திம்பேர்: பார்த்தேன், பார்த்தேன்.


அம்மாஞ்சி: நம்ம பா. ஜ. க. வின் சட்டப்பிரிவைச் சேர்ந்தவர் பெயரில் வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்கள். அண்மையில் பா. ஜ. க. வில் சேர்ந்து கொஞ்ச நாள் இங்கே இருக்கப்போகிற குஷ்பு அம்மையாரையும் இது பற்றி அறிக்கை தரச் சொல்லியுள்ளார்கள்.

 

அத்திம்பேர்: ஆமாம். ஆமாம்.

 

அம்மாஞ்சி: இதுதான் பா. ஜ. க. என்ற கட்சியின் நிலை என்றால், அந்தக் கட்சியே சனாதன தர்மத்தையும் மனு நீதியையும் நியாயப் படுத்த முயல்கிறது என்று ஆகுமே.

 

அத்திம்பேர்: ஆமாம். ஆமாம்.

 

அம்மாஞ்சி: திருமாவளவன் மனுநீதியைப் பற்றிமட்டும் சொல்லவில்லை. சனாதன தர்மம் என்ற அமைப்பே பெண்களைத் தாழ்த்தி  வைத்திருந்தது என்றுதானே சொல்கிறார். அது உண்மைதானே.

 

அத்திம்பேர்: ஆமாம். ஆமாம்.

 

அம்மாஞ்சி: அப்படி இருக்கும்போது மனு நீதி மேல்தானே பா. ஜ. க. வுக்குக் கோபம் வரவேண்டும். அதில் என்ன இருக்கிறது என்று எடுத்துச் சொன்ன திருமாவளவன் மீது ஏன் கோபம் வரவேண்டும். இது சும்மா அவரை மிரட்டி வைக்கும் தந்திரம்தானே?

 

அத்திம்பேர்: ஆமாம். ஆமாம்.

 

அம்மாஞ்சி: இன்னும் எவ்வளவு காலத்திற்கு இவ்வாறு நாம் செயல்படுவோம்? கம்பன் செய்த கயமையைச் சுட்டிக்காட்டி அண்ணா கம்பரசம் எழுதியபோது, கம்பனை விட்டுவிட்டு அண்ணாவை வில்லனாக்கினோம். இன்று மனுநீதியையும் பிற சனாதன நூல்களில் உள்ள கொடுமைகளை விட்டுவிட்டு அவற்றை எடுத்துச்சொன்ன திருமாவளவனைத் தாக்குகிறோம். இப்படித்தான் நமது செயல்பாடுகள் இருக்குமா?

 

அத்திம்பேர்: ஆமாம். ஆமாம்.

 

அம்மாஞ்சி:  அப்படியென்றால்,  தம்மைக் கற்பழிக்கும்போது பெண்கள் அதை ரசிக்கிறார்கள் ( "… It is not that the women do not like rape. They like sometimes. They are willing. That is the psychology. Outwardly they show some displeasure, but inwardly they do not. Heh heh. This is psychology" ) என்று இஸ்கான் தலைவர் ஸ்ரீல பிரபுபாத என்பவர் சொன்னபோது பா. ஜ. க. இதுபோல வழக்குப் பதிவு செய்யவில்லையே.

 

அத்திம்பேர்: ஆமாம். ஆமாம்.

 

அம்மாஞ்சி: அவர்தானே ‘பகவத் கீதை உள்ளது உள்ளபடி’ (Bhagavath Geetha As it is) என்ற நூலை எழுதியவர்?

 

அத்திம்பேர்: ஆமாம். ஆமாம்.

 

அம்மாஞ்சி: அந்த நூலைத்தானே, அவற்றின்  சில பகுதிகள் ஏற்றுக்கொள்ளவியலாதவையாகவும் தீவிர வாதக் கருத்துக்களாகவும் இருப்பதாகவும் ("objectionable and extremist".) கூறி, இரசிய அரசு தடை செய்ய ஆணை பிறப்பித்தது ?

 

அத்திம்பேர்: ஆமாம். ஆமாம்.

 

அம்மாஞ்சி: அண்ணாவும் திருமாவளவனும் புத்தகத்தில் உள்ளவற்றைத்தான்  எடுத்துச் சொன்னார்கள்.  ஆனால் ஸ்ரீல பிரபுபாத கற்பழிப்பைப் பற்றிப் புளகாங்கிதம் அடைந்து புன்னகையுடன், நகைப்புடன் சொன்னது எந்தப் புத்தகத்திலும் இல்லையே. அவரது சொந்த ஆய்வுப்படி சொன்ன கருத்தாகத்தானே தெரிகிறது.

 

அத்திம்பேர்: ஆமாம். ஆமாம்.

 

அம்மாஞ்சி: அவர் சொன்னது உலகில் உள்ள அனைத்துப் பெண்களையுமே அவமானப்படுத்தும் சொல்தானே ?

 

அத்திம்பேர்: ஆமாம். ஆமாம்.

 

அம்மாஞ்சி: அப்படியிருந்தும், கற்பழிக்கப்படும் பெண்கள் பற்றித் தனது சொந்தக் கருத்தைக் கூறிய பிரபுபாடா மீது வழக்கு தொடரப்படவில்லை என்பது ஒரு வர்ணத்துக்கொரு நீதி என்ற மனு நீதிக்கால நடைமுறை இன்றும் தொடர்கிறது என்றுதானே காட்டுகிறது?  திருமாவளவன் புத்தகங்களில் உள்ளவற்றைத்தானே சொன்னார். அவ்வாறு சொன்னது தவறே இல்லையே.

 

அத்திம்பேர்: ஆமாம். ஆமாம்.

 

அம்மாஞ்சி: இவ்வாறான வழக்குகளை  Malicious Prosecution என்று புறந்தள்ள வைத்து, இவ்வாறான வழக்குத் தொடர்ந்த நபர் மீதும் அவருடைய கட்சியின் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும்தானே ?

 

அத்திம்பேர்: ஆமாம். ஆமாம்.

 

அம்மாஞ்சி: ஆமாம்.  கற்பழிக்கப்படும் பெண்கள், அவ்வாறு கற்பழிக்கப்படுகின்ற அந்த நேரத்தில் தங்கள் மனஆழத்தில் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி அந்த இஸ்கான் தலைவர், எவ்வாறு அறிந்து கொண்டார்? எத்தனை பெண்களுடைய உள்ளத்தை அவர் ஆராய்ந்து, அவர்கள் கற்பழிக்கப் படும்போது இவ்வாறுதான் நினைக்கிறார்கள் என்று இவர் கண்டுபித்தார்?  எந்த அனுபவத்தின் மூலமாக அந்த இஸ்கான் தலைவருக்கு , இந்த விஷயத்தில்  இவ்வளவு ஆழ்ந்த தெளிவு  வந்தது?

 

அத்திம்பேர்:  தெரியாது, அம்மாஞ்சி!