Sunday 13 December 2020

இறந்துவிட்டேன் !

 


(1)

இறந்துவிட்டே னெனையழைத்துச் சென்றா ராங்கே 

எமதர்மன் வாஎன்றான்! எதிரில் நின்றேன்!

பிறந்துவிட்ட நாள்முதலாய்ப் பூலோ கத்தில் 

பெருஞ்செயல்நீ  செய்ததுதா னென்ன வென்றான்.

அறுந்துவிட்ட நூல்கொண்ட பட்டம் போல 

அரும்பொருளை மேன்மேலும் குவித்த தாலே 

சிறந்துபட்ட வாழ்க்கைநான் வாழ்ந்தே னென்று 

செம்மாந்த மிடுக்கோடு பேசலா னேன்!


(2)

பெரும்பணக்கா ரன்வீட்டிற் பிறந்த தாலே 

பிணிகவலை எதுவுமிலை வளர்ந்த காலை

அரும்பிவரும் இளம்பருவத் தென்றன்த ந்தை 

அவருடைய வணிகத்தில் இழுத்து விட்டார்

விரும்பியவை குறுக்குவழி தனிலே சென்று   

வெல்லு;அறம் பாராதே என்று ரைத்தார்    

சுரும்பெனநா னுழைத்துஅவர் வழியிற் சென்று

சுற்றியுள தனைத்துமென தாக்கிக் கொண்டேன்!


(3)

விந்தியசாத் பூராபோல் மலைக ளோடு 

விலையில்லாக் கனிமங்கள் உள்ள காடு 

சிந்துமுதல் பொருணை வரை தரையி லோடு 

செவ்விளநீர் போன்ற வருந்தண்ணீ ரோடு 

முந்திசெலும் வானூர்தி நிலையத் தோடு

முன்பின்னாய்ச் செல்லுதொடர் வண்டி யோடு 

இந்தியநா டேயெனக்குச் சொந்த மாக

எல்லோரும் எனக்கடிமை யாகி நின்றார்!

(4)

அதிகாரத்தில் இருக்கும் அமைச்ச ரெல்லாம்  

அவர்க்கான விலைதரவும் தம்மை விற்பார்.

விதியேது  இருந்தாலும் அவை  திரிக்கும் 

விலைமாத ரானபல அலுவ லர்கள்  

சதிசெய்து நமக்குதவி செய்து வைப்பார்

சட்டம்நான் வைத்ததுதான்;  எளிய மக்கள்

பொதிதன்னைச் சுமக்கின்ற கழுதையாகப் 

பொழுதெல்லா மெனைவியந்தென் சுமைசுமப் பார். 

(5)

ஊடகங்கள் அத்தனையும் கைக்குள் கொண்டேன் 

உண்மைகளைத் திரித்துலகை யாட்டி வைத்தேன் 

நாடகந்தான் பூவுலகம் என்றார் அந்த   

நாடகத்தை நானியக்க லானேன்; வென்றேன்! 

மூடர்களாய்ப் பொதுமக்கள் தம்மை ஆக்கி    

முட்டாள மைச்சர்களைக் கைக்குள் போட்டு 

கேடுகேட்ட அதிகாரிக் கூட்டத் திற்கு  

கையூட்டு தந்தெனது  செயல் முடித்தேன். 


(6) 

ஒன்றேதா னங்கெனக்குக் கவலை யெல்லாம்

உலகினிலே பெரியபணக் கார னாக 

என்றேனும் வரவேண்டு மென்ற நோக்கில் 

எல்லாச் சட்டங்களையும் எனக்கு ஏற்ற 

தொன்றாக ஆக்கிதரும் சிறிய கூட்டம் 

துப்பறியும் துறையினைத் தன் கையிற்கொண்டு

என்றுநினைத் தாளுமெனை வீழ்த்து தற்கு 

ஏற்றபடி உளவறிந்து வைத்தி ருப்பார். 


(7)

என்றெல்லாம் நான்சொல்ல எமன் நிறுத்தி 

‘எவ்வளவு பெரியவன்நீ என்றா கேட்டேன்?

நன்றான பெரியசெயல் என்ன செய்தாய்  

நாடினையோ எளியர்நலங் காப்ப தற்கு?’

என்றென்னைக் கேட்டிடயா னில்லை என்றேன்.

எனக்கெளியோர் பற்றிகவல் இல்லை என்றேன்

குன்றன்ன பணம்கண்ட தாலேசொர்க் கம் 

கொடுஎன்றேன்; புன்னகைத்தான்; நரகம் தந்தான்!