Wednesday, 27 January 2021

மின்னணு எந்திர வாக்கு முறையும் கேட்பாரில்லாத தேர்தல் ஆணையர்களும் !

 2019 ல் வாய்ஸ் ஆஃப் ஒபிசி இதழில் வெளியான கட்டுரை. 

=================================================


(அறக்கடவுள் எமனுடைய அவை. அங்கிருக்கும் பெருந்திரையில் இந்தியத்தேர்தல் களம் தொடர்பான செய்திகள் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கின்றன. அவையோர் அதனைக் கூர்ந்து கவனிக்கின்றனர். செய்திகள் ஒளிபரப்பு முடிந்ததும் எமன் அவையோரிடம் வினவுகிறார்.)


எமன்: இந்தியாவில் என்னதான் நடக்கிறது? இப்படித்தான் ஒரு நாட்டில் தேர்தல் நடைபெறுமா? இந்தியாவில் மக்களாட்சி முறை தொடருமா!


அப்துல் கலாம்: ஐயனே! இந்தியாவில் மக்களாட்சி முறைசாதாரணமாகக் கேள்விக்காளாக்கப்படவில்லை. இந்த முறை மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துகொண்டிருக்கிறார்கள். இன்றைய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள்தாம் இதற்குக் காரணம். 


எமன்: எப்படி அவ்வாறு சொல்லுகிறீர்கள்?


அப்துல் கலாம்:  நான் இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்திருக்கிறேன்.  2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் நான் வாக்களித்தேன். என்னைப்போலவே பிரதீபா பாட்டீலும் அவர் குடியரசுத் தலைவராக இருந்தபோது பொதுத் தேர்தலில் வாக்களித்தார். எங்களுக்கு முன்னர் குடியரசுத் தலைவராக இருந்த கே. ஆர். நாராயணனும் அவ்வாறு வாக்களித்துள்ளார். நாங்கள் யாராவது  அதே தேர்தலில் வாக்குச் சாவடி அதிகாரிகளை ஏமாற்றி இரண்டாவது முறையாக வாக்களிக்க முடியுமா?  


எமன்: முடியாதுதான். தொலைக்காட்சிகள்தாம் உங்கள் செயல்பாடுகளை மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பிக்கொண்டிருக்குமே? நீங்கள் எப்படி இரண்டாவது முறையும் வாக்களிக்க முடியும்?  மேலும், உங்களை வாக்குச் சாவடி அதிகாரிகளுக்கும் நன்றாகத் தெரியுமாதலால், இரண்டாவது முறையாக நீங்கள் வாக்களிக்க முயன்றால், அந்த அதிகாரிகள் உங்களை விடமாட்டார்களே? அது மட்டுமல்ல! நீங்களெல்லாம் அந்நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்தவர்கள். எனவே, நீங்கள் இரண்டாவது முறையாக வாக்களிக்க மாட்டீர்கள் என்பது மக்கள் அனைவருக்குமே தெரியுமே?




அப்துல் கலாம்: ஆம். இருந்தும்கூட நாங்கள் வாக்களிக்கச் சென்றபோது எங்கள் இடது கை சுட்டுவிரலிலும் வாக்குச் சாவடி அதிகாரிகள் கருப்பு மையால் குறியிட்டார்கள்.  நாங்கள் இரண்டாம் முறை வாக்களித்துவிட மாட்டோம் என்று அனைவருமே நம்பினாலும் கூட, அந்த நம்பிக்கையின் அடிப்படையில் எங்களை த் தேர்தல் ஆணையம் விட்டுவிடவில்லை. மக்களின் அந்த நம்பிக்கை உறுதிப்படுவதற்கான சாட்சியத்தைத் தேர்தல் ஆணையம் உருவாக்கியது. அதனால்தான் எங்கள் கைவிரல்களிலும் கருப்பு மை வைக்கப்பட்டது.  நீதிமன்றங்கள் நியாயம் செய்தால் மட்டும் போதாது; அவை, நியாயம் செய்வது அனைவருக்கும் தெளிவாகவும் அவர்கள் ஐயப்படுவதற்கிடமில்லாதவகையிலும் தெரியவேண்டும். இது ஏதோகொஞ்சம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதல்ல; மிக அடிப்படையான முக்கியத்துவம் வாய்ந்ததாகும். (“It is not merely of some importance, but is of fundamental importance that Justice should not only be done but should also manifestly and undoubtedly be seen to be done” - Lord Chief Justice Hewart - 1924). இந்தக் கொள்கை நீதிமன்றங்களை விட தேர்தல் ஆணையத்திற்கு அதிகம் பொருந்தும். தேர்தல்  ஆணையரின் செயல்பாடுகளை மக்கள் நம்பவேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது; அவர் தனது கடமையை  மக்கள் நம்பும்வகையில், யாருக்கும் எந்த ஐயம் வந்தாலும் அதை மீளப் பரிசீலித்துது தெரிந்துகொள்ளும் வகையில் செய்தல் அவசியம். இந்த இடத்தில்தான் தேர்தல் ஆணையம் தவறாகச் செயல்படுகிறது. இது நல்லதல்ல.  ஏனெனில், தவறான முறையில் நடக்கும் தேர்தல்கள் வன்முறைக்கு வித்திடுகின்றன. தேர்தல்கள் வன்முறைக்கு மாற்றாகும். (“An electoral process is an alternative to violence as it is a means of achieving governance.. When conflict or violence occurs, it is not a result of an electoral process; it is the breakdown of an electoral process”- Jeff Fischer - Electoral Conflict and Violence: A study for strategy and prevention - 2001-02 ). எனவே, அத்தேர்தல்களை நேர்மையாக நடத்தவேண்டிய கடமை ஒரு நாகரிகமடைந்த சமுதாயத்திற்கும் அச்சமுதாயத்திலுள்ள அதிகாரிகளுக்கும் இருக்கிறது. 


எமன்: இன்றைய தேர்தல் ஆணையம், நீதிபதி ஹேவார்ட் கூறிய இலக்கணத்திற்குட்பட்டு நடக்கவில்லையா?


 அப்துல் கலாம்: இல்லை என்பதே வருத்தம் தரும் உண்மையாகும்.


எமன்: எப்படி அவ்வாறு திட்டவட்டமாகக் கூறுகிறீர்கள்?


அப்துல் கலாம்:  இந்தத் தேர்தல் ஆணையம் வாக்குச் சீட்டுகள் மூலம் வாக்களிக்கும் முறையை மாற்றி, கணினி மூலமாக வாக்களிப்பதற்கான   எந்திரங்களை மிகத்தீவிரமாக நடைமுறைப் படுத்திக்கொண்டிருக்கிறது.  இந்த எந்திரங்களின் நம்பகத்தன்மை பற்றி எல்லாக் கட்சிகளும் தமது ஐயப்பாட்டைத் தெரிவித்த பின்னர் கூட, தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள மறுக்கிறது. மக்களாட்சி முறையில் சிறந்து விளங்கும் நாடுகள் கூட இன்று வரை, இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகளைப்போல தீவிரமாகக் கணினி எந்திரங்களைத் தேர்தல்களுக்குப் பயன்படுத்தவில்லை. இந்தியாவிலோ, மக்களாட்சி முறை என்பது மலரும் நிலையில்தான் இன்றும் உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், இந்த இந்திய நாட்டில் உள்ள அதிகாரிகள் கூட்டம், இந்த விஷயத்தில் மட்டும் மிகத் தீவிரம் காட்டி,  வழக்கம் போலத் தங்கள் ஆளுமைக்குள் ஆளுங்கட்சி அமைச்சர்களை உட்படுத்தி, தங்கள் விருப்பம் போலச் செயல்படுகின்றனர். கணினி எந்திரங்கள் வாக்கு எண்ணும் முறையை விரைவாக்கும் என்ற ஒன்றுதான் இதுவரைகண்ட பயன். ஆனாலும், ஒரு தொகுதியில், வாக்குச் சீட்டு முறை மூலம் தேர்தல் நடத்துவதை விட, கணினிக் கருவிகள் மூலம் தேர்தல் நடத்துவது செலவைப் பன்மடங்கு அதிகமாக்குகிறது என்பது  அனுபவத்தில் நாங்கள் கண்ட உண்மையாகும். மத்திய அரசே, ஒரு கணினி வாக்குப்பெட்டி செய்ய,  (M3 EVM Ballotting unit and Control unit) 17000 ரூபாய் அளவில் செலவாகிறது என்று ஒத்துக்கொள்கிறது. (Q. No.12 of its FAQ). இது ஒரே ஒரு பெட்டிக்கான செலவாகும். எனவே, தேர்தலைப் பெரும் செலவுக்கு ஆளாக்கியிருப்பதுதான் கணினி முறை வாக்களிப்பு ஆகும். மேலும், தேர்தல் அமைப்பையே பொருளற்றதாக்கி, தேர்தலின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கி, தேர்தல் பரப்புரைகளையும், மக்களின் விருப்பங்களையும் ஒன்றுமில்லாமல் ஆக்கி எதேச்சாதிகார ஆட்சி ஏதோ ஒரு சமயத்தில் அமைவதற்கும் அமைப்பதற்கும் இந்தக் கணினி முறைத்தேர்தல் மிக எளிதில் வழிவகுக்கும் வாய்ப்பு மிகப்பெரும் அளவில் உள்ளது. ஆளுங்கட்சியின் உயர்மட்ட அரசியல்வாதிகளும், தேர்தல் ஆணையத்தின் உயர்மட்ட அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து கொண்டால், தேர்தல் முறையை ஒரு நாடகமாக மாற்றி மக்களாட்சி முறையை எளிதில் குழியில் தள்ளிப் புதைக்க முடியும். இவ்வாறு நாங்கள் செய்யவில்லை என்றுதான் தேர்தல் அதிகாரிகள் கூறுகிறார்களே தவிர, இவ்வாறு கணினிமுறையில் செய்ய முடியாது என்று கூறவில்லை. எனவே, மக்களாட்சி முறையை உறுதிப்படுத்தும் தேர்தல் மீது மக்களுக்கு நம்பகத்தன்மை வரவேண்டுமானால், பழைய வாக்குச் சீட்டு முறைதான் மீளவும் வரவேண்டும். ஆனால், தேர்தல் ஆணையரோ, கணினியோடு இணைந்த வாக்குச் சீட்டுகளை எண்ணிப் பார்ப்பதற்குக்கூடத் தீவிர எதிர்ப்பைக் காட்டுகிறார். இது வினோதமாகவே இருக்கிறது. அதிகாரிகளின் விருப்பத்திற்கேற்ப நாடு செல்லவேண்டும் என்ற அந்தத் தேர்தல் ஆணையரின் எதிர்பார்ப்பே, அவர் மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரானவர் என்பதைத்தான் காட்டுகிறது.  இதுபற்றிப் பலர் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். 


இதில் தீவிர ஆய்வு செய்த அமெரிக்க மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், தமது ஆய்வுரையின் இறுதிக் கருத்தாக, தொழில் நுட்பத்தில் மிகமுன்னேறிய நாடுகள் கணினி முறை வாக்களிப்பைக் கைவிட்டுவிட்டன என்றும், தொழில்நுட்ப அறிவு மிகவும் வளர்ந்துள்ள  இன்றைய நிலையில், உண்மையான பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு அவற்றைத் தீர்க்க முயல வேண்டுமே தவிர, இந்தியாவின் தேர்தல் அமைப்பு உண்மைகளை மக்கள் பார்வையிலிருந்து மறைக்கக் கூடாது என்று கூறியுள்ளனர்.  “Using EVMs in India may have seemed like a good idea when the machines were introduced in the 1980s, but science’s understanding of electronic voting security— and of attacks against it— has progressed dramatically since then, and other technologically advanced countries have adopted and then abandoned EVM-style voting. Now that we better understand what technology can and cannot do, any new solutions to the very real problems election officials face must address the problems, not merely hide them from sight. பத்து ஆராய்ச்சியாளர்கள் கொண்ட இந்த ஆய்வுக்குழுவில் முக்கியமானவர்கள்,  டச்சு நாட்டுக் கணினி அறிவியல் அறிஞர், ராப் காங்க்ரிப், இந்தியாவைச் சேர்ந்த ஹரி பிரசாத், மிச்சிகன் பல்கலைக்கழகக் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் பேராசிரியர் அலெக்ஸ் ஹால்டர்மேன் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்களது தங்களுடைய 14 பக்க ஆய்வறிக்கையின் இறுதியில், ஜி.வி.எல். நரசிம்மராவ் என்பவருக்குத் தாங்கள் தங்களின் இந்த முயற்சிக்குக் கடன்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர். (“We are particularly indebted to G.V.L. Narasimha Rao, whose efforts to increase election transparency in India paved the way for this research, and who provided indispensable guidance and advice throughout the process”). 


எமன்: அது யார் அந்த ஜி.வி.எல். ராவ்?



அப்துல் கலாம்: இந்த ஜி.வி.எல். ராவ்  இன்றைய ஆளுங்கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியின் தேசிய மக்கள் தொடர்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமாவார். இவர் கணினி மூலம்  வாக்களிக்கும் முறையில் உள்ள தீங்குகள் குறித்து ‘Democracy at Risk! Can we trust our Electronic Voting Machines?என்ற நூலை எழுதியுள்ளார். இதனை சுட்டிக்காட்டி, நேஷனல் ஹெரால்டு நாளிதழ், 11.12.2017 அன்று “கணினி வாக்களிப்பு எந்திரங்களைத் 2012ல் திரிக்கமுடியும், தற்போது முடியாதா?” (EVMs hackable in 2012, not now?” என்ற விரிவான கட்டுரையை வெளியிட்டது.  இன்றைய நிலையில், இந்தக் கணினி வாக்கு எந்திரங்களைப்பற்றி அதிகம் அறிந்தவர்கள், பா.ஜ. க. வினர்தான் என்று Indiaresists என்ற இணையத்தளம் தெரிவிக்கிறது. எனவே, தேர்தல் முறையில் கணினியின் மூலம் வாக்களிப்பதை மறு பரிசீலனை செய்யவேண்டிய தேவை இன்றைக்கு மிக அதிகம் உள்ளது. வெறும், அரை விழுக்காடோ அல்லது ஓரிரண்டு விழுக்காடுகளுக்கோ, VVPAT மூலம் கணினிகள் சரியாக வேலை பார்த்தனவா என்று சரிபார்ப்பது முறையல்ல. இதுபற்றியும் அத்துறையில் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்களில் முக்கியமாக, முன்னாள் ஐ.ஏ. எஸ். அலுவலரான கே. அசோக வர்தன் ஷெட்டி ஒருவர் ஆவார். இவர் இந்து நாளிதழ் நடத்தும்  The Hindu Centre for Politics and Public Policy என்ற பொதுநல அமைப்பில்   உரையாற்றும் போது ( Policy Watch No. 7),  கணினிகளோடு வரும் வாக்குச் சீட்டுகளைக் (VVPAT) குறைந்த அளவில் சரிபார்க்கப்படுவதென்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்றும் இது  கணினிகள் தவறாகச் செயல்படுவதையும், கணினிகளைத் தவறாகப் பயன்படுத்துவதையும் கண்டறிய உதவாது என்று கூறினார். (“..the sample size prescribed by the ECI for VVPAT Audit is a statistical howler that fails to conform to fundamental sampling principles, leading to very high margins of error which are unacceptable in a democracy. By failing to detect outcome-altering miscounts due to EVM malfunction or fraud, it defeats the very purpose of introducing VVPAT. Spending hundreds of crores of rupees on procurement of VVPAT units makes little sense if their utilisation for audit purposes is reduced to an exercise in tokenism” (Winning Voter Confidence: Fixing India’s Faulty VVPAT-based Audit of EVMs - - The Hindu Centre for Politics and Public Policy - 27.11.2018). 





எமன்: ஏன்? வாக்குப் பதிவு எந்திரங்களில் எந்த தகிடுதிருத்தமும் செய்யமுடியாது என்று தேர்தல் ஆணையர் கூறுகிறாரே? இதற்காகச் சவால் கூடவிட்டாரே? அப்போது, கெஜ்ரி அகர்வால் முதல் யாரும் அந்தச் சவாலை ஏற்று தேர்தல் ஆணையத்தின் கூற்று பொய் என நிரூபிக்கவில்லையே?


அப்துல் கலாம்: ஆமாம். ஏனெனில்,  ஒவ்வொரு தொகுதிக்கும் உள்ள வேட்பாளர்கள் வேவ்வேறு அலகுகளாகக் (Units) கருதப்படுவர். எனவே, எந்த எந்திரத்தில் என்ன செய்து வைத்துள்ளார்கள் என்று கண்டுபிடிப்பது கடினம். எனவே, இந்தக் கருவிகளைச் சோதிப்பது என்றால் அனைத்து எந்திரங்களையும் தனித்தனியாகச் சோதிக்கவேண்டும். அது சாதாரண வேலையல்ல. தேவையான வேலையுமல்ல. எனவேதான், VVPAT முறை கொண்டுவரப்பட்டது.ஆனால், அதையும் முழுமையாகச் செயல்படுத்த தேர்தல் ஆணையர் தயங்குகிறார். அவ்வாறு செய்தால், தேர்தல் முடிவுகள் வெளியாக ஆறு நாட்கள் கூடுதலாகத் தாமதம் ஆகும் என்று வேறு கூறுகிறார். இது நகைப்புக்கு இடமாகிறது. எதிர்க்கட்சிகள் அந்த காலதாமதம் ஆனால் பரவாயில்லை என்றும், முழுவதும் எண்ணுங்கள் என்றும் கூறிகின்றன. அதற்குப் பின்னரும் VVPAT சீட்டுகளை எண்ணுவதற்கு தேர்தல் ஆணையர் தயங்குகிறார். அவருடைய அந்தத் தயக்கம்தான், இந்தத் தேர்தல் முறை மீதே, மக்களுக்குப் பெரும் ஐயப்பாட்டை உண்டாக்குகிறது.


எமன்: உண்மைதானே! அரசியற்கட்சிகள் ஒத்துக்கொள்ளும்போது, தேர்தல் ஆணையருக்கு ஏன் அவசரம்? உண்மையில், இந்தக் கணினி வாக்களிப்பு முறை வந்த பிறகுதான், தேர்தல் ஆணையம் மாதக்கணக்கில் தேர்தல் முறையைத் தாமதப்படுத்துகிறது. இதில், மேலும் சில நாட்கள் ஆவதைப் பற்றித் தவறில்லை. வாக்களிப்பு முறையும் வாக்குகள் எண்ணப்படும் விதமும் நேர்மையாக இருக்கவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விரும்புவது நியாயந்தானே? இதனையும் எதிர்ப்பதால்தான், தேர்தல் ஆணையர்கள் நம்பகத்தன்மை இழந்து மக்களிடையே கேலிக்குரியவர்களாகிறார்கள்? 


அப்துல் கலாம்: உண்மை ஐயனே! குடியரசுத் தலைவராக இருந்தாலும், அவருடைய நேர்மை பற்றி யாருக்கும் ஐயம் இல்லையென்றாலும், அவர் மறுமுறை அன்றைய தேர்தலில் வாக்களிக்க முடியாது என்ற நிச்சயத்தன்மை (Certainty)யும் இருந்தாலும் கூட, அவரது கைவிரலிலும் கருப்புமைக்குறி வைத்துத்தான் ஆக வேண்டும் என்கின்ற மிகச் சிறந்த மக்களாட்சி அமைப்பு உருவாக்கி வைக்கப்பட்டுள்ள இந்திய நாட்டில், இப்போதுள்ள தேர்தல் ஆணையர்கள் நாங்கள் நேர்மையானவர்கள்தான், நம்பிக்கொள்ளுங்கள்,எங்கள் கணினி வாக்கு எந்திரம் பற்றிச் சாட்சியம் கேட்காதீர்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பது மட்டுமல்ல, தங்கள் விருப்பப்படித் தேர்தலை நடத்திக்கொண்டே இருக்கிறார்கள். 


எமன்: இந்த அதிகாரிகளை எதிர்த்து யாரும் கேள்வி கேட்கவில்லையா?


அப்துல் கலாம்: கேட்கிறார்கள். ஆனால், அந்தக் கேள்விகளுக்கு இந்தத் தேர்தல் அதிகாரிகள் விடை தருவதில்லை. நாடு இப்படியே போய்க்கொண்டிருப்பதுதான் வேதனையாக இருக்கிறது. இந்த அதிகாரிகளைத் தமது செயல்களுக்குப் பொறுப்பேற்க வைக்கும் வகையில்  (Accountability) இன்றுள்ள சட்டங்கள் இல்லை. எடுத்துக் காட்டாக, குஜராத்தில், கோத்ரா தொகுதியில் 1917ல் நடந்த தேர்தலில், வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகள் 1, 76,417. ஆனால், வாக்கு எந்திரங்கள் காட்டிய வாக்குகள் 1,78,911. இது எப்படி நடந்தது என்று பிரியங்கா காந்தி கேட்டதற்கு இன்று வரை தேர்தல் ஆணையம் விடையிறுக்க வில்லை.  இதுபோல, பல வாக்குச் சாவடிகளில் பல மாநிலங்களில் நடந்துள்ளன. 





எமன்: இதற்கு என்னதான் விடை? 


அப்துல் கலாம்: யார் எந்தத் தொகுதிக்கு VVPAT அடிப்படையில் மறு எண்ணிக்கை கேட்கிறார்களோ, அவர்களுக்கு அந்த மறு எண்ணிக்கைக்கான வாய்ப்பை முழுமையாக வழங்க வேண்டும். தேர்தல் ஆணையர் தன்னிச்சையாகச் செயல்பட அனுமதிக்கக் கூடாது. அவர் ஒரு  பலகட்சியினரின் அமைப்பின் நேரடி மேற்பார்வையில் செயல்படவேண்டும். அந்த அமைப்பு பல கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். அப்போதுதான், தேர்தல் ஆணையம் உண்மையிலேயே நேர்மையாகச் செயல்படுகிறது என்று மக்கள் தெரிந்துகொள்ள முடியும். சுருக்கமாகச் சொல்லப்போனால், மக்களுக்காகத்தான் அதிகாரிகள் இருக்கவேண்டுமேயன்றி மக்களை ஏமாற்றும், எள்ளி நகையாடும் அதிகாரிகள் மக்களாட்சிமுறைக்கு எதிரிகளாகத்தான் இருப்பார்கள். ஆனால், இன்றைய தேர்தல் அதிகாரியோ, அந்தக் கடமையிலிருந்து தப்பிக்க முயலுகிறார். இது ஏற்க இயலாதவொன்று. காந்தி,நேரு முதலானோர் போராடிப் பெற்ற சுதந்திரம் தேர்தல் ஆணையர்களால் பறிக்கப்படுவதற்ற்கு மக்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். 


எமன்: உண்மை. இந்தியர்கள் வெள்ளையரை எதிர்த்துப் போராடியதெல்லாம், இந்திய நாட்டுத் தேர்தல் ஆணையர்களின் செயல்பாடுகளால், வீணாய்ப்போகக்கூடிய வாய்ப்பு மிக அதிகமாகவே இருக்கிறது. 


(அப்போது பெரியார் பேசவிழைகிறார். சித்திர குப்தர் அவரைப் பேச அழைக்கிறார்).


பெரியார்: ஐயனே! இந்த மத்திய அரசு அமைப்பானது, அங்குள்ள அதிகாரிகளின் பிடியில்தான் உள்ளது. அவர்கள்தாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை, அமைச்சர்களை ஆட்டிப்படைக்கின்றனர். இன்றைக்கே, இந்தியாவில் உள்ள அரசியல் அமைப்பை,  ‘மட்டுப்படுத்தப்பட்ட மக்களாட்சி’ (Limited Democracy) என்று, மற்ற வளர்ந்த மக்களாட்சி நாடுகள் கிண்டல் செய்கின்றன. அதுமட்டுமா? ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழ் 2018 டிசம்பரில் வெளியிட்டுள்ள அந்த இதழாசிரியர் குழுவின் கட்டுரையின் தலைப்பே “India is a 50-50 democracy” என்பதாகும். இதனைக்கண்டு இந்தியாவில் உள்ள படித்த மக்கள் வெட்கித் தலைகுனியவேண்டும். இந்த ஆய்வுக்கட்டுரையில் வரலாற்றறிஞர் இராமச்சந்திர குகாவின் கருத்தை, ரீடர்ஸ் டைஜஸ்ட் குழு (RD Team) கேட்டபோது அவர் இந்தியாவில் உள்ள மக்களாட்சி முறை ‘தேர்தலில் மட்டுமே மக்களாட்சி’ (Elections-only Democracy) என்று மாறக்கூடிய அபாயம் இருக்கிறது என்று கூறியுள்ளார்.  ஆனால், இந்த ஒன்றுக்கும் உதவாத வாக்கு எந்திரங்களைப் பிடித்துக்கொண்டு இந்தியத் தேர்தல் ஆணையர்கள் ஆடும் ஆட்டம், தேர்தலிலும் மக்களாட்சி இல்லாமற் போகச் செய்யும் என்று காட்டுகிறது. VVPAT எண்ணிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தேர்தல் அதிகாரிகள் ஜனநாயக விரோத சக்திகளாக, மக்கள் விரோத சக்திகளாகத்தான் இருக்கமுடியும். உண்மையான மக்களாட்சி உள்ள நாடுகளில்தான், சாதாரண மக்களின்  திறமைகள் வெளிப்பட வாய்ப்புகள் கிடைக்கும். இந்தியா பன்னெடுங்காலமாக முன்னேறாத காரணம் அங்கே பெரும்பான்மை மக்களின் மனித உரிமைகள் மறுக்கப்பட்டு அவர்களது வாய்ப்புகள் பறிக்கப்பட்டதுதான். 


(எமன் அக்கருத்தை ஏற்றுத் தலையாட்டுகிறார். அப்போது அம்பேத்கார் இசைவு பெற்றுப் பேசுகிறார்)






அம்பேத்கார்: இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஜெர்மனி, நெதர்லாண்டு ஆகிய பல நாடுகள் ஏன் வாக்களிக்கும் எந்திரங்களைத் தலைமுழுகிவிட்டுப் பழைய வாக்குச் சீட்டு முறையையே தொடர்ந்து கடைபிடிக்கின்றன என்பதற்குச் சொல்லும் காரணங்கள்  மிகவும் நகைப்புகுரியவையாக இருக்கின்றன. உண்மையில், இவர்கள் கருத்துக்கள் பொறுப்பற்றவை. வாக்கு எந்திரங்கள் எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு அல்ல. அப்படி இருக்கும்போது, தவறுகள் நடக்கக்கூடிய வாய்ப்புக்கள்  உள்ள ஒருமுறையை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்திவிட்டு, அது ஏதோ முழுக்க முழுக்கப் புனிதமானது என்று மக்கள் கருதவேண்டும் என்பது போலச் சித்தரித்து, எந்த வாக்கு எந்திரமாவது சரியாக வேலை செய்யவில்லை என்று வாக்காளர்கள் புகார் கொடுத்தால், அவர்களை அச்சுறுத்தவேண்டும் என்பதற்காகவே, மக்களை மிரட்டுவது போல 49 MA என்ற ஒரு சட்டப்பிரிவையும் தேர்தல் ஆணையம் கொண்டுவந்துள்ளது. இதன் மீதான வழக்கு தற்போது உச்சநீதி மன்றத்தில் நடந்து வருகிறது.


எமன்: அது என்ன சட்டம்?