செல்வி. மீனா கந்தசாமி எழுதிய குறத்தி அம்மன் (The Gypsy Goddess) என்ற நூலைப் பாராட்டி எழுதிய பாடல்:
1.
காவிரியால் காவிரிந்த தமிழ்நி லத்தைக்
கண்டுகொண்ட மாற்றார்கள் கவர்ந்து கொள்ள
பூவிரிந்த நாள்முதலாய் இதனை ஆண்டு
பொதுமறையைத் தந்தமக்கள் அடிமை யானார்.
மூவரிந்த நானிலத்தை ஆளும் போதே
முழுவுரிமை சதுமறையா லிழக்க லானார்.
நீவிரிந்த நிலத்திலினி கூலி யென்று
நிலம்பறித்தோர் சொன்னதையு மேற்க லானார்.
2.
ஆலமதை விடக்கொடிய மனுவின் நீதி
அவனியிதில் சூழ்ச்சியினால் கொண்டு வந்தோர்
காலமெலாம் கூலிகளா யிவரை யாக்கி
கனவினிலும் உயர்ந்தநிலை மறக்க வைத்தார்.
ஓலமிடும் தம்வயிற்றுப் பசியைப் போக்கும்
ஓரகப்பை உணவேதான் பெரிதென் றாக
ஞாலமிதில் கைப்பொருளும் உண்மை காட்டும்
மெய்ப்பொருளும் கிட்டாத பிரிவா யானார்.
3.
சாதிகளை எண்ணற்ற வகையா யாக்கி
சதிசெய்து அவர்களுக்குள் சண்டை மூட்டி
வீதிகளில் நடப்பதற்கும் விதிகள் செய்து
வெவ்வேறு பகுதிகளில் வாழச் செய்து
மேதினியில் ‘அபார்த்தீட்’ ** முதலில் கண்டு
மேல்தட்டி லேயமர்ந்த ஆரி யர்கள்
ஆதிமுதல் தமிழ்நிலத்தை ஆண்ட மக்கள்
அடிமட்டத் தில்வாட அடிக்கல் நட்டார்.
4.
எப்போதும் இந்தநிலை இறுகி நிற்க
எல்லாக்கொ டுஞ்செயலுஞ் செய்யு மாற்றை
முப்பாட்டன் கௌடில்யன் எழுதிச் செல்ல
முனைப்போடு செயல்பட்ட ஆரி யர்கள்
‘அப்பார்த்தீ டு’க்குள்ளே ‘அப்பார்த் தீடா’ய்
அடுக்கடுக்காய் வைத்திந்த நாடு தன்னில்
தப்பாது கலவரங்கள் நடப்ப தற்கு
தமிழர்களைப் பிரித்தாளும் வழிகள் செய்தார்.
5.
மாறவில்லை இந்தநிலை மன்னர் நாளில்;
மாறவில்லை வெள்ளையர்கள் ஆளுங் காலை;
ஏறவில்லை வாழ்க்கைநிலை இந்த நாட்டை
இந்தியரே ஆளுவதாய்ச் சொன்ன போதும்.
கூறவில்லை யோபெரியா ரம்பேத் காரும்?
கூவியல்ல வோயிவரை விழிக்க வைத்தார்!
தேறவில்லையே தமிழர்! திசைதி ருப்பும்
தேசீயக் கட்சிகளால் திறலி ழந்தார்!
6.
சமவுரிமை யில்லாமல் சமவு டைமை
சற்றுமிங்கே வாராது என்ற போதும்
தமதுரிமை தமதுநிலை அறியா வண்ணம்
தடுக்கின்ற கட்சிகளை நம்ப லானார்!
தமதுஇன மக்களையே தாழச் செய்ய
தமக்கெதிரி இட்டபணி யாவுஞ் செய்தார்!
அமைதியிலே தீர்க்கின்ற சிக்க லெல்லாம்
அழல்கொண்டு தீர்க்கயிவர் கருவி யானார்.
7.
(வேறு)
தீவி ரிந்தது வைத்தவன் தமிழன்
தீயெ ரிந்ததால் வெந்தவன் தமிழன்
தீவி ரிந்திட வைத்தவன் கூலி
தீயெ ரிந்திட வெந்தவன் கூலி
நாவி ரிந்ததீ கருக்கிய தாலே
நாகைக் கீழ வெண்மணி தன்னில்
ஆவி நீத்த அத்தனை பேரும்
அழல்வைத் தவருக் கண்ணன் தம்பி!
8.
இருந்தும் எதனால் வைத்தனன் தீயை?
எதனால் கொளுத்தினன் தன்தமிழ்ச் சேயை?
பிரிந்தன ரண்ணன் தம்பிக ளெல்லாம்
பிரித்தவர் சதியில் வீழ்ந்தன ரெல்லாம்
வருந்திட வில்லைக் கொடுஞ்செயல் செய்ய,
வரலா றெல்லாம் மறந்தத னாலே!
திருந்தவி டாதச் சதுமறை ஓங்கின்
தினமோர் 'வெண்மணி' 'அயோத்தி யா'தான்!
9.
(வேறு)
கரும்பக்கம் ஏராளம் இந்த நாட்டில்
கணக்கினிலே கொண்ட வர லாற்றிலேயே!
இரும்புக்கு முன்பிருந்த காலந்தன்னில்
இந்நாட்டில் வந்தமர்ந்த வர்ணப்பேயால்
கரும்பொத்த வாழ்க்கையது காணாமற் போய்
கண்ணீரில் கரைந்தகதை ஏராளந் தான்!
சுரும்பொத்த ஆர்வத்தோ டோடித் தேடி
சுவையோடு அவைபற்றிக் கூறும் மீனா
10.
திரும்பத்தான் திரும்பத்தான் இதனைப் போல
திசையெட்டும் இசையெட்டும் புத்த கங்கள்
விரும்பித்தான் பலவெழுத தமிழ்நிலத்தில்
விதையாகி விதைகளுக்கு மழையு மாக
அரும்பத்தான் போகின்றார் எழுத்தா ளர்கள்
அவனியிலே எளியர்நலங் காப்ப தற்கே!
திரும்பித்தான் உலகுதமிழ் நாட்டைப் பார்க்கத்
திருப்பிய மீனாவிற்கு நன்றி! வாழ்க!!
- * - Apartheid
- வேயுறுதோளிபங்கன்