Saturday, 20 December 2014

பார்ப்பனர் வரலாறு அந்தணர் வரலாறு ஆகுமா? பேராசிரியர். இரா.மதிவாணன்

நெடுங்காலமாய் பார்ப்பனர் என்னும் சொல்லை விரும்பாமல் பிராமணர் எனத் தம்மை அழைத்துக் கொள்பவர்கள், பார்ப்பனர் வரலாறு என்று தலைப்பிடாமல் அந்தணர் வரலாறு என்னும் தலைப்பில் நூல் வெளியிட்டுள்ளனர். தமிழை நீசமொழி என்பவர்கள் அந்தணன் எனும் தமிழ்ச் சொல்லை விரும்பி ஏற்றுக் கொள்ளலாமா? எனும் வினா எழுந்துள்ளது.

அந்தணர் என்போர் அறவோர் என்பதை எவரும் அறிவர். பார்ப்பனர் யார் யாருக்கு என்னென்ன அறங்களை (தருமங்களை) வரலாற்றில் செய்திருக்கிறார்கள்? சமண மதத்தைப் போலச் சாதி வேறுபாடுகளை நீக்கினார்களா? கல்வியும் மருத்துவமும் அனைவருக்கும் வழங்கினார்களா? பொன்னும் பொருளும் வாரி வழங்கினார்களா? வாழ்வியல் கொடுமைகளை எதிர்த்தும் மூட நம்பிக்கைகளை எதிர்த்தும் போராடினார்களா?

“நீர்ப்பலகால் மூழ்கி நிலத்தசைஇ தோலுடீஇ
சோர்சடை தாழ சுடரோம்பி - ஊரடையார்
கானகத்த கொண்டு கடவுள் உயிர் வாழ்க்கை
வானகத்து உய்க்கும் வழி’’

என வாழ்ந்திருந்தவர்கள் தமிழ் அந்தணராகிய துறவிகள். பார்ப்பனர் தோலுடை அணிந்திருந்தவர் அல்லர். உச்சிக் குடுமி வைக்காமல் சடைமுடி கொண்டவர்களும் அல்லர். ஆதலால் தமிழ் அந்தணர் கோலம் பார்ப்பனர் தோற்றமுடையது அன்று. சமண மதத்திலும் தோலுடையணிந்து சடை முடி கொண்டவர் எவரும் இலர்.

செம்பூ மூக்கின் நன்னார் களைந்து
தண்டோடு பிடித்த தாழ்கமண் டலத்து
படிவ உண்டி பார்ப்பன மகன்

எனப் பார்ப்பனனின் தோற்றம் முற்றிலும் வேறாகக் கூறப்பட்டுள்ளது. மரவுரி உடுத்த கோலத்திலும் பார்ப்பனர் எப்பொழுதும் காணப்பட்டதில்லை. இதிலிருந்து பார்ப்பனர்க்குத் தலை மொட்டையடித்த தவக்கோலமும் தமிழ் அந்தணர் தவக்கோலமும் முற்றிலும் மாறானவை எனத் தெரிகின்றது.

“காமஞ் சான்ற கடைக்கோட் காலை
ஏமஞ்சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே’’

எனும் தொல்காப்பிய நூற்பாவும் அகவை முதிர்ந்த நிலையில் இல்லறம் நீங்கிக் கணவன் மனைவி ஆகிய இருவரும் துறவறம் மேற்கொள்வதைச் சுட்டிக்காட்டுகிறது. பார்ப்பனன் மனைவியும் துறவு மேற்கொண்ட காட்சியைக் காணமுடியாது.

குற்றிசை என்னும் புறத்துறை, கட்டிய மனைவியை முதுமைக் காலத்தில் தனியாக விட்டுவிட்டு ஆண் மகன் தான்மட்டும் துறவியாகக் கூடாது என்று சொல்கிறது. ஆதலால் பார்ப்பனர் துறவுக்கோலமும் தமிழர் துறவுக்கோலமும் முற்றிலும் வேறானவை: கொள்கையளவில் முரண்பட்டவை எனத் தெரிகிறது. தமிழிலக்கியங்களில் பார்ப்பார், அந்தணர், வேதியர், ஓகியர், தவத்தோர் முனிவர், மறையோர், துறவோர் அறவோர், நீத்தார், தாபதர், அறிவர். சான்றோர் போன்ற சொற்கள் ஆளப் பெற்றுள்ளன. அவற்றுள் எவ்வெச் சொல் என்னென்ன பொருள்களில் ஆளப்பட்டது என அறிதல் நலம்.

“பார்ப்பார் தவரே சுமந்தார் பிணி பட்டார்’’ எனும் பாடல் வரியில், பார்ப்பாரும் தவசிகளும் வேறுபட்டவர் எனப்படுகிறது. பார்ப்பார் என்பதற்கு வேதத்தையே பொருளென்று மேற்கொண்டு பார்ப்பார் என நச்சினார்க்கினியர் பொருள் கூறியிருக்கிறார். மேற்கொண்டு பார்த்தல் என்பதை அவர் விளக்கிச் சொல்லவில்லை. பார்ப்பார் என்பதை மேய்ப்பர் என்றாற்போல் வினையாலணையும் பெயராகக் கொள்ள முடியவில்லை. வேதம் எழுதக் கூடாத மொழியாதலால் வேதத்தைப் படிப்பவர் என்று சொல்ல முடியவில்லை. இனி, பார்ப்பன மக்கள் எனும் சொல் பாரதத்தில் “வேதப் பனுவலுக்கும் தவத்தினுக்கும் உரிய வேள்விப் பார்ப்பன மாக்களிடையே பாண்டு மைந்தர் ‘அவர் உருக்கொண்டு மாறியிருந்த தன்மை கண்டு’ (பாரத திரௌபதி 49) எனக் கூறப்பட்டுள்ளது யோகமும் தவமும் தமிழர்க்கேயுரியன. யாகமும் வேதமும் பார்ப்பனருக்கே உரியன. தமிழரின் தவமும் பார்ப்பனர்க்கு உரியதாக தமது பாரதக் கதையில் கூறியிருப்பது, பார்ப்பனரை அந்தணர் என்று சொல்வதைப் போன்ற முழுமையான பொய்யாகும். வேளாப் பார்ப்பான் எனும் சொல் பூணூல், உச்சிக் குடுமி கொள்ளுதல் தவிர வேதம் ஓதத் தகாத பார்ப்பனனைக் குறித்ததே ஆகும்.

பார்ப்பனரின் தொழில் (பார்ப்பார் தொழில்) முக்கடனாக - மூவகையாகப் பகுக்கப்பட்டதைத் திரிகடுகம். “மூன்று கடன் கழித்த பார்ப்பானும்’’ என்று (திரிக. 34) கூறுகிறது. தேவர் முனிவர் தென்புலத்தார் ஆகியோர்க்குச் செய்யும் வேள்வி, வேதம் ஓதுதல், மகப் பெறுதல் என்பவையே மூன்று கடன்களாகும். இவையல்லாமல் பார்ப்பான் தொழிலை மேலும் ஆறு வகைப்பட்டது என விரித்துக் கொண்டது ஏன் என்று எவரும் கேட்கவில்லை.

ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பனவற்றில் ஈதலும் ஏற்றலும் தொழில்களே அல்ல. வேட்பித்தலும் தொழிலாகாது. அரசனுக்குக் கோயில் கட்டுவித்தல் தொழிலாகலாம். ஆனால், கோயில் கட்டும் பணியாளர்க்குக் கட்டுவித்தல் தொழிலாகாது. ஆதலால் வேள்வி செய்யும் பார்ப்பாருக்கு வேள்வி செய்வித்தல் தொழிலாகாது; வேள்வி செய்வதே அவராகலான். வேட்பித்தல் தொழிலாயின் வேள்வி செய்யப் பெரும் பொருள் கொடுத்த கொடையாளியின் தொழிலே வேட்பித்தலாகும்.

இனி, ஓதுவித்தல் என்பது பார்ப்பனர், பார்ப்பனரையே ஓதுவித்தலாலும், ஓதும்போதே ஓதுவித்தல் பணி உடன் நிகழ்வதாலும், பார்ப்பனர் தொழில் ஓதலும் வேட்டலுமாக இரு வகைக்குள் அடங்கிவிடுகிறது. பார்ப்பனர் எவர்க்கும் ஈயாமையின் ஈதலை அவர்க்குரிய தொழிலாகச் சொல்லவே முடியாது.

தமிழர் ஏற்பது இகழ்ச்சி எனக் கருதுவர். அது தொழிலாகாது. இந்தியாவில் மலைவாழ் மக்கள்கூட இரந்து பிச்சையெடுக்க முன்வருவதில்லை என ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். எனவே, பார்ப்பனர் அறு தொழில் என்பது வேளாளர் அறுதொழில் என்னும் சொல்லாட்சியை நோக்கித் தாமும் அறுதொழிலுடையோர் எனக் காட்டுதற்காகச் செய்த வெளிப்படையான சூழ்ச்சி என்பது உறுதியாகிறது.

தனக்கு வேண்டும் என நினைத்த பொருள் கிடைக்கும்வரை பேராசை தணியாமல் புலம்பிக் கொண்டிருப்பவன் என்னும் பொருளில் பார்ப்பனன் எனும் சொல்ல திருவிளையாடற் புராணத்தில்

“சாம்பிழி வதென்ன பார்ப்பான் என்ன’’
(திருவிளை. மா. பாத.28) ஆளப்பட்டுள்ளது.
பழந்தமிழில் பார்ப்பான் எனும் சொல் தமிழரின் நாகரிக வளர்ச்சி நிலைகளில் திடுமென மிகவும் சோர்வுற்றவர், நோயுற்றவர் ஆகியோருக்கு மணி, மந்திரம், மருந்து எனும் மூவகையால் மருத்துவம் செய்ய முயல்வதுண்டு.
மாணிக்கக் கற்களால் நோய் நீக்குவது, ஏதேனும் மந்திரம் சொல்லி நோய் நீக்குவது போன்றவை. அச்சம், வருத்தம், ஏமாற்றம் ஆகியவற்றால் தன்னிலையிழந்து நோயுற்றவர்க்குரியது.

உடல்நலக் குறைவுள்ளவர்களுக்கு நாடி பார்த்து மூலிகை மருத்துவம் செய்வது இயல்பான மருத்துவ முறை.
மந்திரம் சொல்லி இது எந்தத் தெய்வக் குற்றத்தால் ஏற்பட்டது என்று பார்க்கும் மந்திரக்காரனைப் பழங்காலத்தில் பார்வைக்காரன் - பார்ப்பான் என வட்டார வழக்காகக் குறிப்பிட்டனர்.

யாழ்ப்பாணம் கதிரை வேற்பிள்ளை தமிழகராதியில் பார்வைக்காரன் என்னும் சொல்லுக்கு நோய் தீர்க்க மந்திரம் கணித்துப் பார்ப்பார் எனப் பொருள் கூறப்பட்டுள்ளது. மந்திரம் உச்சரித்தலை பார்வை பார்த்தல் என்று குறிப்பிட்டுள்ளனர். பார்ப்பனனின் மந்திரங்கள் வேள்விக்குரியன. நோய் தீர்ப்பதற்கு எங்கும் வேத மந்திரம் ஓதப்படாததால் மந்திரம் ஓதிய பார்வைக்காரன் பொருளில் பார்ப்பனர் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டிருக்க முடியாது.

பாரம் எனும் சொல் பருத்தியையும், வெண்மையையும், வெண்ணிறப் பூண்டையும் குறித்தது. பால் நிறம் வெண்ணிறத்தைக் குறித்தது. பால் - பார்ப்பு என்பதும் வெண்ணிறம் குறித்தது. சிவப்பு - கருப்பு என்பன போன்று பால் - பால்ப்பு - பார்ப்பு என வெண்ணிறப் பொருள் ஏற்றது. சிவப்பன், கருப்பன் என ஆண்பால் பெயர்ச் சொல் தன்மை பெற்றது போலப் பார்ப்பு - பார்ப்பனன் - பார்ப்பன் பார்ப்பான் என நிறங்குறித்த பெயர்ச் சொல்லாயிற்று.

பார்ப்பாரப் பூசணி, பார்ப்பாரக் கழுகு, பார்ப்பாரப் பசலை, பார்ப்பாரப் பூண்டு, பார்ப்பார நாகம் என்பவை வெண்ணிறம் குறித்தவை. பார்ப்பு என்பது தொழிற் பெயராயின் ஆர்ப்பு + இன் + அன் = ஆர்ப்பினன் என்றாற் போன்றது ‘இன்’ சாரியை பெற்றுப் பார்ப்பினன் என வடிவம் பெற்றிருத்தல் வேண்டும்.

பண்பு, நிறம் குறித்த சொற்களே அம் + தண் - அந்தண் + அன் + அன் - அந்தணன், பார்ப்பு + அன் + அன் - பார்ப்பனன் ‘அன்’ சாரியை பெறும். ‘பார்ப்பு’ இளமைப் பெயருமுண்டு எனத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். ஆல்-ஆர்ப்பு (ஆலுதல்-ஒலித்தல்), கால் (காலுதல்) - கார்ப்பு என்றாற்போல், பால்-பார்ப்பு எனத் திரிந்து வெண்மை நிறம் குறித்தது.

பறவைக் குஞ்சுகள் பால் மணம் மாறாத பச்சிளமையுடைமை எனும் பொருளிலும் பறவைக் குஞ்சுகளின் வாய் வெளுத்திருக்கும் தோற்றம் குறித்தும் பார்ப்பு எனும் பெயர் பெற்றன. இதனாலும் பார்ப்பு வெண்மை நிறம் குறித்த சொல் என அறியலாம். இச் சொல்லே குழந்தையைக் குறிக்கும் ‘பாப்பா’ எனவும் மாறியது.

வெண்ணிறப் பொருள் கொண்ட பால் எனும் சொல் பிற உலக மொழிகளுக்கும் சென்றுள்ளது. ஆங்கிலத்தில் ஹடட எனும் சொல்லும். எபிரேய இனத் தைச் சார்ந்த கானானியரின் வெண்ணிறத் தெய்வத்தைக் குறிக்கும் பாஅல் எனும் சொல்லும் குறிப்பிடத்தக்கன. பால் எனும் சொல் வால் எனத் திரிந்து பலராமனைக் குறித்த வாலியோன் எனும் சொல்லாயிற்று. பால்-பாலிகை (வெண் முளை). பாளை, பாண்டு (வெள்ளை) பாண்டில் (வெள்ளை எருது). பானல் (வெள்ளை வெற்றிலை) எனும் சொற்களையும் நோக்குக.

அந்தணன் என்பது அறவோர், அருளாளர், முனிவர், கடவுள், சிவன், அருகன் ஆகியோரைக் குறித்த சொல். இதனைப் பார்ப்பனர் தம்மைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்திக் கொண்டனர். திருவள்ளுவர் நீத்தாராகிய துறவியரை மட்டும் அந்தணர் என்கிறார்.

எவ்வுயிர்க்கும் அருள் சுரக்கும் அறநெறி நூல் கருத்துகளை மக்கள் மனத்தில் விதைத்துப் பண்பும் ஒழுக்கமும் கட்டிக்காப்பது அவர் பணியாதலின் அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல் என வள்ளுவர் விளக்கியுரைத்தார்.

“நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க் குரிய’’

எனத் தொல்காப்பியர் மேலும் அந்தணன் எனும் சொல்லுக்கு விளக்கம் தந்தார். இது பார்ப்பனரைக் குறித்த சொல்லாயின் முப்புரி நூல், உச்சிக் குடுமி, தருப்பைப் புல் ஆகிய மூன்றையும் மறவாமல் குறித்திருப்பார். இதிலிருந்தே தொல்காப்பியர் காலத்தில் அந்தணர் எனும் சொல் பார்ப்பனரைக் குறிக்கவில்லை எனத் தெரிகிறது.

அந்தணர்க்கு ஆறு தொழில்களையும் தொல்காப்பியர் சொல்லவில்லை. ஆபயன் குன்றும் அறு தொழிலோர் நூல் மறப்பர் என்னும் குறட்பா வரியிலும் ஆகு பயன்களாகிய விளையுள் குறைபடும். அறு தொழில்களுக்குரிய வேளாளர்தம் நூற்கல்வி மறப்பர் என்றே பொருள்படுகிறது.

அந்தணர் என்பதற்கு வேதாந்தத்தைப் பொருளாக மேற்கொண்டு பார்ப்பார் என்று நச்சினார்க்கினியர் வலிந்து விளக்கம் சொல்லி மழுப்பியிருக்கிறார். அந்தண்மை என்பதற்கு அருளுடைமை என்னும் நேரடியான பொருள் சொல்லாமல்,

‘குளித்து மூன்றனலை யோம்பும்
குறிக்கொள் அந்தணமை தன்னை
(நாலாயிர. திருமாமலை - 25)

என முத்தீ வளர்க்கும் பார்ப்பனத் தொழிலைக் குறிப்பிட்டிருப்பது சொற்களின் வரலாற்றையே திசை திருப்புவதாக உள்ளது. குறிஞ்சிக்குக் கபிலன் எனப் புகழ்பெற்ற கபிலரும் தன்னை அந்தணன் புலவன் எனக் கூறிக்கொண்டது காலத்தின் கோலமல்லாமல் வேறொன்றுமில்லை.

பார்ப்பான் கவுணியன், விண்ணந்தாயன் போன்றோர் வெளிப்படத் தம்மைப் பார்ப்பான் என வெளிப்படுத்திக் கொண்ட நேர்மை ஏற்கத்தக்கது. கபிலர், முக்கோல் மணை ஆகியவற்றை ஏந்தித் தவம் செய்யும் முனிவராகப் பாரியிடம் வரவில்லை. ஆதலால் தவக்கோலம் கொண்டவர் தவிர வேறு எவரும் தொல்காப்பிய நூற்பாவின் வண்ணம் தம்மை அந்தணர் என்று சொல்லிக்கொள்வது தவறாகும்.

“எப்பொருள் எச்சொலின் எவ்வா றுயர்ந்தோர்
செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே’’

எனத் தெரிந்தும், கபிலர் போன்றோர் தம்மை அந்தணர் எனச் சொல்லிக் கொண்டதும் இக்காலத்தில் பார்ப்பனர் தம்மை அந்தணர் எனச் சொல்லிக் கொள்வதும் எட்டுணையும் பொருந்தாததும், தமிழ் மரபுகளை வேண்டுமென்றே மீறுவதும் ஆகும்.

பார்ப்பனர் வரலாற்றை அந்தணர் வரலாறு என நூல் எழுதி வெளியிட்டிருப்பதும், நடுவு நின்ற நன்னெஞ்சினோரும் அறத்தின் தன்மை உணர்ந்தாரும் செய்யத் தக்கதன்று. அதுமட்டுமின்றித் தம் சாதி உயர்வைத் தொடர்ந்து நிலைநாட்டுவதற்காக மேற்கொண்ட கொரில்லாப் போர்முறையாகவே கருதப்படும். பார்ப்பனர் முத்தீ வளர்ப்பது தவம் செய்வதாகாது. ஆதலால் பார்ப்பனர் தம்மை அந்தணர் என அழைத்துக் கொள்வது நகையாடத் தக்கதாகும். பார்ப்பனரை ஆங்கிலோ இந்தியர் என்றாற்போல் ஆரிய இந்தியர் எனக் கூறுவதே பொருந்தும்.

ஆரிய - திராவிடப் போராட்டம் என்று சொல்லப்பட்டதெல்லாம் யாகம் செய்வோர்க்கும் - யோகம் செய்வோர்க்கும் இடையிலான கருத்து வேற்றுமைகளே ஆகும். திராவிடர் தவம் (யோகம்) செய்வதை ஆரியர் தடுத்தனர். ஆரியரின் யாகங்களை அரக்கர் சிதைத்தனர் என்னும் வரலாற்று முரண்பாடுகள் அறிவியல் வளர்ந்த இந் நூற்றாண்டில் களையப்பட வேண்டும். அமைதியும் நல்லுறவும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு அடிப்படையாகச் சொற்களை வரம்போடு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; அதுவே நல்லது.

உலக நாடுகள் எல்லாம் மக்களுக்குச் சமவுரிமை தந்து அமைதிப் பாதையில் அணி வகுத்து வழிநடத்தும் அறிவுலகச் சூழலில், சாதியுயர்வை நிலைநாட்டித் தாமே உயர்ந்தவர் எனத் தலைதூக்க முயன்று நிலை குலைந்துபோன செருமானிய மன்னன் இட்டலரைப் போல் பார்ப்பனச் சாதியுயர்வை நிலைநாட்ட அந்தணர் வரலாறு என நூலுக்குப் பெயரிடுவது நாணத்தக்க செயல். நடுவு நெஞ்சினர் நினைத்தும் பார்க்கக் கூடாத அடாத முயற்சி.

பார்ப்பனர் வரலாறு அல்லது பிராமணர் வரலாறு எனப் பெயரிட்டிருந்தால் பொய்யாகச் சாதிப்பதிலும் ஒரு நேர்மை காட்டுவதாக அமைந்திருக்கும். இப்பொழுதுகூட நேர்மைக்கும் உண்மைக்கும் மதிப்பு தரும் அந்தண்மை எள்ளள வேனும் அவர்களிடம் இருந்திருந்தால் அந்தணர் வரலாறு எனப் பெயரிட்டிருக்க மாட்டார்கள்.

“பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே’’ என்று பாரதி பாடியபோதே பார்ப்பானை அந்தணன் என்ற காலமும் போய்விட்டது. பிரம்மாவின் முகத்தில் பிறந்தவர்கள் என ஐ.நா. மன்றத்தில் நிறுவிக் காட்டி, முகம்மதியருக்கும் கிறித்தவர்க்கும் மேலான சாதியென்று உலக மக்களை ஒப்புக் கொள்ளச் செய்து உலக அரங்கில் சாதியுயர்வு முடிசூட்டிக்கொள்ள முயற்சி செய்திருக்கலாம். அதை விட்டுவிட்டு தமிழர்களின் ஏமாளித்தனத்தை அறுவடை செய்து அதனையே மூலதனமாகக் கொண்டு நோகாமல் வாழும் வரலாற்றுப் புரட்டுவாதத் திறமை காட்டி அந்தணர் வரலாறு எழுதுவது யாரை ஏமாற்றுவதற்காக? உலக மக்கள் இன்னுமா ஏமாந்திருக்கிறார்கள்?

‘மன்னன் உயிர்த்தே மலர் தலை யுலகம்’ என மன்னனை முதற்குடியாகக் கொண்டது தமிழினம். பார்ப்பானை முதற்குடியாகக் கொண்டதில்லை. மன்னனும், பண்பாடு வளர்த்த தமிழ்ச் சான்றோராகிய புலவர்களையே தனக்கு வழிகாட்டும் குருவாகக் கொண்டிருந்தான். அமைதிப் புறா ஒளவை மூவேந்தரிடையே ஒற்றுமைக்காகப் பாடுபட்டது போல் எந்தப் பார்ப்பனப் புலவராவது போரைத் தவிர்த்து ஒற்றுமையாக வாழுங்கள் என ஒரு வரியாவது பாடியது உண்டா?

ஒளவையார் தொண்டைமானிடம் தூதுசென்று போர் தவிர்த்தது போல, கபிலர் தூது சென்று பாரியின்மீது போர் தொடுக்கும் முயற்சியை ஏன் தடுத்திருக் கக்கூடாது? ஒருகுடிப் பிறந்தவர்களுக்குள் போர் வேண்டா எனக் கோவூர் கிழார் பாடியதை ஏன் கபிலர் பின்பற்றவில்லை? பார்ப்பார் நோவன செய்யாதீர்கள் பார்ப்பன உயர்வை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் பாடியிருக்கிறார்.

தமிழர் மனம் நோவன செய்யாதீர்கள் எனப் பார்ப்பனர்க்கு அறிவுரைத்த பார்ப்பனப் புலவர் எவரும் இலர். மூவேந்தர்களிடையில் எப்போதும் பகை வளர்க்கும் நாரத வேலையே பார்ப்பனரின் முழு மூச்சாக இருந்திருக்கிறது. பாண்டிய குலத்துக்கு எமன் எனும் பொருளில் ‘சோழனுக்குப் பாண்டிய குலாந்தகன் என்றும் பாண்டிய மரபுக்கு இடி போன்றவன் எனும் பொருளில் பாண்டிய குலாசனி’ என்றும், பட்டம் தந்து பாராட்டி உசுப்பி விட்டிருக்கிறார்கள். கேரளாந்தகன், சோழகுலாந்தகன் என்பனவும் மூவேந்தர்களிடை கலகம் மூட்டிய பட்டங்களே.

மதுரையை அழிப்பவன் எனும் பொருளில் மதுராந்தகன் எனப் பாராட்டிப் புகழ்ந்திருக்கிறார்கள். தமிழினம் அழிய வேண்டும்; தமிழர்களிடையில் என்றும் ஒற்றுமை வளரவே கூடாது எனக் கங்கணம் கட்டிக்கொண்டு செழிப்பான நிலக்கொடைகளும் வளமான வாழ்வும் தந்த தமிழ் மன்னர் மரபுக்கு நன்றி மறந்து சொல்லொணாக் கொடுமை செய்தவர்களுக்கு அந்தணர் என்னும் பெயர் கனவிலும் கருதக் கூடாதது என்பதை அவர்கள் மனச் சான்றே அவர்களுக்கு வலியுறுத்தும்.

மனச்சான்று உடையவர்களாயிருந்தால், பார்ப்பனர்களால் இந்த நாட்டிற்கு விளைந்த நன்மை என்று ஒன்றே ஒன்றுகூடக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. அடர்ந்த காடுகளிலும் ஆழ்கடலிலும் அஞ்சாது புக்கு காடு கொன்று நாடாக்கி, நாகரிகப் பயிர் வளர்த்து பண்பாட்டு வெற்றிக் கனி தந்த தமிழினத்தார் பதினெண் குடிப் பிரிவுள்ள ஐந்திணை மக்களே அன்றி நிற வேறுபாடு கொண்ட நால்வருணத்தார் அல்லர்.

பார்ப்பனர் என்று பொது மக்கள் தந்த சாதிப் பெயர் பிராமணர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆதலால் இந்தியா முழுவதிலும் பிராமணர் என்றே சொல்லிக் கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் ஐயர். அந்தணர் என்னும் கூடுதல் விருதுகளைத் திருடிக் கொள்வது ஏன்? எதற்காகப் பிராமணர் தரும் சூத்திரப் பட்டத்தை மற்றவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்? பொதுமக்கள் தந்த பார்ப்பனர் பட்டம் மட்டும் ஏன் கசக்கிறது?

ஆப்பிரிக்க நிறவெறி போன்று நம் நாட்டின் வேற்றுமை குலைத்துப் பிறப்பு வழி சாதிப் பிரிவான நால்வருண வேறுபாடு, மாப்பிள்ளைப் பரிசமாகிய வரதட்சணை, பருவம் அடையுமுன் பெண் குழந்தைகளுக்குச் செய்யும் இராட்சசம் போன்ற கட்டாயத் திருமணம் ஆகிய மூன்றும் மருந்து கண்டறியாத தீராத நோய்களாகவும், பார்ப்பனரால் வித்தி விளைக்கப்பட்ட கொடுமைகளாகவும் இன்றும் நிலவுகின்றன. இத்தனை கொடுமைகளைப் புரிந்தவர்களுக்கா அந்தணர் பட்டம்!

(Reproduced from Facebook post of Mr. R. Madhivaanan)

1 comment:

  1. People who became ultra rich in Medieval Europe took over the word 'noble' to identify themselves personally and called themselves "Nobles". Soon they called the others 'Commoners'. Likewise, the Brahmins took over the already existing Tamil words like 'Andhanar', 'Iyer', etc., to identify themselves. Even in the era of Tiruvalluvar the word 'Andhanar' denoted only the virtuous saints and Siththars and not the 'Brahmins'. Subverting the history is the pastime of the Brahmins but, fortunately, there are adequate evidences, still available to call their bluff.

    Buddhist literature shows that Buddha called the brahmins as 'Babhan's. It is possible that with the expansion of Buddhist influence in the South that term had become "Paappaan" and then "Paarppaan". This aspect also deserves consideration. One may refer to the book "Community Warriors : State Peasants and Caste Armies in Bihar. The book 'Bihar and Orissa District Gazetteers Patna by L.S.S. O' malle y is also worth-referring to.

    ReplyDelete