ஊடகம் யாருக்காக?
(தலையங்க விமர்சனம் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் திரு. சோதி இராமலிங்கம் மற்றும் திருமதி. கவிதா சோதி இராமலிங்கம் இருவரையும் பாராட்டி வரைந்த கவிதை).
21.12.2014
அமெரிக்க ஐக்கிய நாடுகள்:
எழுந்திடும் வானைநோக்கி எண்ணிலா வெண்முகில்கள்!
இணைந்திடும் அவற்றினோடு எங்கெங்கும் கார்முகில்கள்!
விழுந்திடும் இடியெழுப்பும் வீறொலி கேட்டலாலே
விரைந்திடும் சிதறுநெல்லி மூட்டையாய்ப் பூவுயிர்கள்!
அழிந்திடா துலகைக்காக்கும் அருமழைக் காட்சியீதோ?
அன்றிது 'மைலாய்' தன்னில் அமெரிக்க ராணுவத்தார்
கொழுந்திடும் தீபரப்பி, குருவிபோல் சுட்டுத்தள்ள
குலைகுலை யாகமக்கள் கொலையுண்டு வீழுங்காட்சி!
வந்தனன் அங்கு'செய்மூர் ஹெர்ஷெ'னும் அந்தணன்றான்!
வதையினால் துவண்ட'மைலாய்' வாதையைக் கேட்டறிந்தான்!
சொந்தநாட் டுப்படைதன் சொல்லொணாக் கொடுஞ்செயல்கள்
சுட்டன நெஞ்சைத் தீயாய்! சுழற்றினான் எழுதுகோலை!!
தந்தனன் அறிக்கையாகக் தான்கண்ட உண்மையெல்லாம்!
தந்திகள் வந்துவந்து தம்முன்னே வீழவீழ
முந்தின ஒன்றுக்கொன்றாய் முப்பது இதழ்களாங்கே
தந்தன செய்தியாக, தம்நாட்டுப் படையின் கோரம்!
இங்கிலாந்து:
நடந்தது 'ஃபாக்லேண்ட்'தீவுக் கானபோர் அட்லாண்டிக்கில்!
நாள்தொறும் 'பீ. பீ.சீ ' யில் செய்திகள் ஓளிபரப்பில்,
நடந்தவை பற்றிஇங்கி லாந்துமற் றர்ஜெண்ட்டினா
நாடுகள்ரெண்டும் சொல்லும் செய்திகள் சொல்லிவைக்க
கொடுந்துய ருற்றவர்போல் குமுறிய ஆங்கிலேயர்.
எதிர்க்கவும், 'பீ. பீ. சீ.' யார் எதிர்மொழி அழகாய்ச்சொன்னார்:
"நடந்திடும் போரில்உண்மை முதலிலே சாகச்செய்யோம்;
நாட்டுப்பற் றென்னவென்று நமக்குநீர் சொல்லவேண்டாம்.
ஊடகம் இஃதுயிங்கே உண்மைகள் சொல்வதற்கே!
போரிடும் வீரருக்குப் புத்துணர் வூட்டுதற்கோ
நாடகம் செய்துஆட்சி யாளரை நம்புமாறு
நாட்டுமக் கள்கருத்தை நாளும்வ ளைப்பதற்கோ
ஏடுகள் உண்டுயிங்கே; யாமதைச் செய்யமாட்டோம்!
இன்னுயிர் வீரர்நீத்து இப்போரால் கைம்பெண்ணாகி
வாடிடும் பெண்கள்இந்த நாட்டவ ரானாலென்ன?
எதிரிநா டானாலென்ன? எமக்கவர் ஒருவரேயாம்!"
இட்டாலி:
இட்டாலி மக்களைத்தன் எண்ணற்ற ஊடகத்தால்
கட்டிவைத் தாட்சிதன்னைக் கைப்பற்றி மேலும்நாட்டின்
சட்டமன் றைப்புரட்டி ‘சில்வியோ பெர்லுஸ்கோனி’
தொட்டவி டத்திலெல்லாம் துணிந்துபே ரூழல்செய்தான்.
தட்டியே அவனைக்கேட்கத் தாளிகை ஏதுமில்லை.
தம்நாடு காப்பதற்கு ஊடகர் முயலவில்லை.
இட்டாலி நாடேமேற்கில் இகழ்ச்சிக்கா ளானபோது
சட்டங்கள் காக்குமாயம் மீட்டது நாட்டையங்கு!
பிற:
விதிகளை மீறியங்கே வென்றனன் தேர்தல்என்று
விளக்கினான் ஜாக்ஆண்டர்சன்! வீழ்ந்தனன் நிக்சனாங்கே!
மதியினை மயக்குபோதை மருந்துக்கும் பல்லழிக்க
மண்ணுயிர்க் குண்மைகூறித் தன்னுயிர் தந்தாள்கேகன்!
சதியினால் தனதுநாட்டு ராணுவம் செச்சன்யாவில்
செய்திட்ட கொடுமையெல்லாம் செய்தியாய்க் கொண்டுவந்தாள்.
எதுவந்த போதும் அஞ்சேன் என்றுதன் னுயிருமீந்தாள்
அன்புளங் கொண்டமங்கை அன்னாபொலிட் காவஸ்காயா!
இந்தியா:
அரசியல் என்பதிங்கே அனைவரும் வாழ்வதற்கா?
அல்லதோர் சிலர்க்குமற்றோர் அடிமைக ளாவதற்கா?
அரசியல் என்பதிங்கே முறைசெய்து காப்பதற்கா?
அதிகாரத் தால்மிரட்டிக் கொள்ளைய டிப்பதற்கா?
ஒருசெயல் கூடஆள்வோர் மறைவினில் செய்திடாமல்
உலகிற்கு வெளிச்சமிட்டு உரைப்பதூ டகமா? அன்றி
திரிசம வேலைசெய்து மக்களைத் திசைதிருப்பி
பெரு'மஃபி யா'க்களாகிப் பிழைப்பதூ டகமா?சொல்வீர்!
'எழுதுகோல் தெய்வம்இந்த எழுத்துமே தெய்வம்'என்று
இலக்கணம் சொன்னானன்று இந்நாட்டு ஷெல்லிதாசன்.
பழுதிலா இலக்கணந்தான் படைத்த 'சி.பி. ஸ்காட்' சொன்னான்,
புகழ்ந்திடு இகழ்ந்திடானால் நிகழ்ந்தவை திரித்திடாதே'
விழுதுகள் போலக்காக்கும் விளக்கங்க ளிவையிருந்தும்
வீணர்கள் ஊடகத்தை விலைபொரு ளாக்கிவைத்தார்!
பொழுதெலாம் பொய்யைச்சொல்லி புல்லரை நல்லோர்போலப்
புனைந்திடும் ஊடகத்தார் போலொரு கயவர்உண்டோ?
(வேறு)
நால்வருணக் கொள்கை:
கொடுமையிற் கொடுமைசெய்யும் குறுமதிச் சதுர்வர்ணத்தால்
குவலயம் துவளக்கண்டு கொதித்தனன் புத்தன்அன்று;
மடமையால் மறையைப்போற்றும் மக்களுக் குண்மைகூறி
அடிமையாய் வாடல்விட்டு விடுதலை கொள்ளவைக்கக்
கடுமையாய் உழைத்தபுத்தன் கைக்கொண்ட கருவிஅன்பும்
கருத்திலே உண்மையுந்தான்! காலாயி ரத்துஆண்டு
மிடிமையில் லாதுவாழ்ந்த மக்களை மீண்டும்வேதச்
சதியிலே வீழச்செய்தான் சாணக்ய னென்றகோரன்.
பயங்கர வாதத்தாலும் பஞ்சமா பாதகத்தை
விஞ்சியே திருடர்மற்றும் வேசியர் படையுங்கொண்டு
தயங்கிடா தெங்கும்கொள்ளை கொலைகளைச் செய்துகோயில்
தன்னையே அரசைக்கொல்லும் கூடமா யாக்கிமீண்டும்
நயங்கெடும் வேதசூழ்ச்சி நாட்டிலே பரவவைத்தான்.
நல்லதோர் கல்வியின்றி நாலைந்து நூறுஆண்டு
மயங்கிய மக்களெல்லாம் பெரியாரால் விழிப்புகொண்டார்!
அன்புமற் றுண்மையோடு அறவழிப் போரால்வென்றார்!
‘பொய்யினை மெய்யினால்வெல்’ லென்றதந் நாளந்தாவே!
புலிட்சரும் அதையேசெய்தார்! புவியினை வாழவைத்தார்!
பொய்யர்க ளாளும்நாட்டில் மெய்சொனால் அவதூறென்பார்!
புல்லர்தம் மதிகாரத்தால் புவியினை மிரட்டிவைப்பார்!
நெய்யிடு தீயேஉண்மை! நேர்மைக்கு அச்சம்இல்லை!
உட்வர்டு, செங்கர்மற்றும் பேரன்ஸ்டீன் போலவிங்கு
மெய்யினைத் தேடிக்கண்டு மையிட்டு எழுதும்போது
மிரட்டுவோர் மிரண்டுநிற்பார்! மேதினி எழுந்துநிற்கும்!
உலகிதில் நேர்மைவெல்ல உழைப்பதும் மெண்ணமாயின்
உண்மையா யுழைப்பவர்தம் உரிமைகள் காக்கவேண்டின்
நிலமிதில் தேர்வுசெய்வீர் இதழியல் வாழ்வுதன்னை!
நெடுங்கால மாகவர்ணக் கொடுமைகள் கண்டநாட்டில்
வலிவுடை ஊடகங்கள் செயல்படும் முறைகள்பற்றித்
தெளிவுடை அறிஞர்தம்மைத் திரட்டிஞா யிறுகள்தோறும்
பொலிவொடு ஆய்வுசெய்த சோதிக்கும் கவிதாவிற்கும்
புகழ்மாலை மட்டுமில்லை! புகல்கின்றோம் நன்றி! நன்றி!!
-வேயுறுதோளிபங்கன்
=============================================================================================
Note 1: My Lai in Vietnam.
Note 2: Seymour Hersh
Note 3: 'That night the BBC Chairman, George Howard – who had been appointed on the recommendation of Mrs Thatcher – made a speech defending the BBC and insisting that the Corporation was determined “that in war, truth shall not be the first casualty”……...The BBC’s Managing Director of Radio, Richard Francis, added to the discontent. On 11 May, in a speech in Madrid to journalists from around the world, he said: “It is not the BBC’s role to boost British troops’ morale or to rally British people to the flag...The widow in Portsmouth is no different from the widow of Buenos Aires...The BBC needs no lessons in patriotism from the present British Government or any other.”
Note 4: Sylvio Berlusconi.
Note 5: Veronica Geurin : “The fearless Irish investigative journalist, murdered by drug barons in 1996 when she was just 36, has inspired two movies – including one starring Cate Blanchet, a biography and numerous songs. Renowned for her exposés of crime lords in Dublin, Guerin, who wrote for the Sunday Independent, received several death threats, and was even shot in the leg. But she carried on her reporting unfazed. Her sudden death, which shocked the entire nation, is also believed to have led Irish officials to establish the Criminal Assets Bureau. Survived by her husband and son, Guerin was posthumously named one of International Press Institute’s 50 World Press Freedom Heroes”.
Note 6: Anna Politkovskaya
“The Russian investigative journalist, famous for her coverage of human rights abuses by the Russian government in Chechnya, was assassinated in 2006 outside her Moscow apartment. The New York-born Anna Politkovskaya began her career as a reporter for the official newspaper, Izvestiya. She later joined the opposition-minded Novaya Gazeta newspaper in 1999 and soon after began reporting on the war in Chechnya. Her fearless reporting is believed to be the reason for her murder, however six years later, investigations are still ongoing”.
Note 7: “Facts are sacred. Comment is free” - Charles Prestwich.Scott - Editor Manchester Guardian.
Note 8: “Conquer a liar by truth” - Motto of Nalanda University that was burnt by the Aryans later.
Note 9: Joseph Pulitzer: A prize is given for the best journalism contributions in his name. He wrote for newspapers and later purchased and ran the New York World. After it became obvious that his circulation war with Hearst was becoming problematic for the sensationalized stories, he gravitated toward truth in journalism. He was indicted for libel when he exposed an illegal payment to the French Panama Canal Company, but since the story was based on fact, the indictment was dismissed.
Note 10:Woodward and Bernstein: They brought then-president Richard Nixon down over the Watergate scandal. They are well-known for their investigative journalism and for proving that it was still possible for the press to effectively hold the government accountable.
Note 11: John Peter Zenger: He published the New York Weekly Journal in the 1700s. He wrote unflattering things about the British government, and in 1735 he was arrested and tried for libel. He was found not guilty, since what he wrote was based on fact. His case not only helped influence the American Revolution, but established one of the litmus tests for libel.
No comments:
Post a Comment