Saturday 2 May 2015

திராவிடர், ஆரியர் - சொற்கள் பயன்பாடு - சத்தியப்பெருமாள் பாலுசாமி


திரு. சத்தியப்பெருமாள் பாலுசாமி அவர்கள் முகநூலில் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து:
------------
வடமொழியின் மூத்த இலக்கியங்களின் வழி ஆரியர் × திராவிடர் என்ற கட்டமைப்பை முதலில் ஆராய்வோம்.
ஆரியர் என்பவர் யார்?
"ஆர்ய" என்னும் சொல்லுக்குத், "தவறாது எரியோம்பித் தனது நாட்டின் பண்பாட்டினை மதித்து ஒழுகி, இல்லறம் நடத்தும் நன்மதிப்பு மிக்க ஒருவன்", என்ற பொதுவானபொருளைத் தருகிறது சமஸ்கிருதம்.
ருக்வேதத்தில், 34 ஸ்லோகங்களில், 36 முறை "ஆர்ய" என்னும் சொல் பயின்றுவந்துள்ளது. ஆனால் அத்தனை இடங்களிலும் ஒரே பொருளில் அது கையாளப்படவில்லை.
"மதிக்கத்தக்க/போற்றத்தக்க/விஸ்வாசமுள்ள ஒருவன்", "ஆர்யவர்த்தத்தில் வசிப்பவன்", "ஆர்யவர்த்தத்தின் கொள்கைகளுக்கு விஸ்வாசமாக இருப்பவன்", "அநார்யர்களாகிய தஸ்யூக்களல்லாத ஆர்யவர்த்த இனத்தவன்", "சூத்திரனல்லாத, பிராமண, சத்திரிய, வைஸ்ய வர்ணத்தவன்", "மிக உயர்வாக மதிக்கப்படுபவன்", "மதிப்பிற்குரியவன்", "போற்றத்தகுந்தவன்", எஜமானன்", "நண்பன்", "வைஸ்யன்", என்பது
போன்ற பல்வேறு மாறுபட்ட பொருள்களில் ஆர்ய என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பெரும்பாலும், ருக் வேதத்தில் தனித்த மொழியடையாளம் சார்ந்த, இன அடையாளம் சார்ந்த பொருளில் "ஆர்ய", என்னும் சொல் கையாளப்படவில்லை. "ஆர்ய" என்னும் சொல்லுக்கான பல்வேறு பொருள்களில், "ஆர்யவர்த்தத்தில் வசிப்பவன்", "அநார்யர்களாகிய தஸ்யூக்களல்லாத ஆர்யவர்த்த இனத்தவன்" மற்றும் "சூத்திரனல்லாத, பிராமண, சத்திரிய, வைஸ்ய வர்ணத்தவன்" என்பனவே, ஓரளவு ஒரு இனக்குழுவினரைக் குறிப்பனவாக உள்ளன.
ஆனாலும், அவர்ணர்களும், மிலேச்சர்களுமாகிய தஸ்யூ/தாஸாக்களை மட்டுமல்ல, நால்வர்ணத்தவருள் கடையரான சூத்திரர்களையும் "அநார்ய", என்றே ருக் வேதம் குறிப்பிடுகிறது. அதாவது, "ஆர்ய", என்பவர்கள் யார் என்பதை வரையறுக்கும் பொழுது, உயர்ந்த குணநலன்களை உடையவன் ஆர்யன் என்று சொல்வதுடன் நிறுத்திக்கொள்வதில்லை. யார் ஆரியரல்லாதவர், யாரால் ஆரியராகமுடியாது என்பதையும் வரையறை செய்கிறது. உயர்ந்த ஒழுக்க நெறிகளைக் கைக்கொண்டாலும் சூத்திரர்களும், தஸ்யூக்களும் ஆரியராக முடியாது என்பதையும் தெளிவாகவே குறிப்பிடுகிறது. எவ்வளவு மேன்மையானவனாக இருந்தாலும் ஆர்யவர்த்தத்தைச் சேர்ந்தவனாக, அதன் நெறிகளுக்குட்பட்டு நடப்பவனாக வாழ்பவனையே ஆர்யன் என்று நிர்ணயிக்கிறது.
ஆச்சரியமளிக்கும் வகையில், ருக் வேதத்தின் இந்தக் கருத்தியலை முரண்படும் பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் புறப்பாடல் ஒன்று உள்ளது.
"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்", எனத் தொடங்கிக் கல்வியின் சிறப்பைச் சொல்லிச் செல்லும் இப்பாடல்,
"வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே", என்று கூறி முடிகிறது.
நால்வர்ணத்தின் கடைநிலையில் வைக்கப்பட்டுள்ள சூத்திரன் ஒருவன் கல்வி கற்று உயர்வானாகில், பிராமண வர்ணத்தவனும் அவனிடம் அண்டி நிற்பான் என்கிறது. பிறப்பால் தாழ்ந்தவனாகக் கருதப்படும் ஒருவன், கல்வி கற்பானென்றால், அவனே உயர்ந்தவன் என்கிறது இப்பாடல்.
இதனால் தானோ என்னவோ, மனுஸ்மிருதி சூத்திரர்களுக்குக் கல்வியை மறுத்தது போலும். (1912 - ம் ஆண்டின் பிரிட்டிஷ் கணக்கெடுப்பின்படி, மதராஸ் ராஜதானியின் மொத்த ஆண்களின் எண்ணிக்கையில் 3.2% பேரே பார்ப்பனர்கள். ஆனால், கீழ்நீதிபதிகளில் (sub-judgeships) 83.3% த்தினரும், இணை ஆட்சியர்களில் (deputy collectors) 55% த்தினரும், மாவட்ட ஆட்சிப் பதவியினரில் 72.6% த்தினரும் பார்ப்பனர்களாக இருந்திருக்கிறார்கள். சென்னைப்பல்கலைக் கழகத்தில், baccauleaurate degrees வாங்கிய 67% த்தினரும் பார்ப்பனர்களாக இருந்தது தற்செயலானதா என்பதை எண்ணிப்பார்க்க.).
இமயமலைக்கும் விந்தியமலைக்கும் இடைப்பட்ட, மேற்கடலுக்கும் கீழ்க்கடலுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பையே "ஆர்யவர்த்தம்", என்கிறது மனுஸ்மிருதி.
ருக்வேதத்தின் ஆரம்பத்தில் ஒழுக்கத்தால் உயர்ந்தவன் என்று சுட்டப்பட்ட, பின்னர், பிறப்பால் உயர்ந்தவன் என்று வரையறுக்கப்பட்ட, ஆர்யவர்த்தத்தினன் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஆரியர்களின் நிலப்பகுதியை வேதங்களுக்கும் புராணங்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்ட மனுஸ்மிருதி தெளிவாக வரையறுக்கிறது.
விந்தியமலையின் தெற்கே ஆரியவர்த்தம் விரியவில்லை. ஆரியவர்த்தத்தினனே ஆர்யன் எனும் பொழுது ஆர்யவர்த்தமல்லாத விந்தியமலையின் தென்பகுதியில் வாழ்ந்தவர்கள் ஆரியராகக் கருதப்படவில்லை என்பது உணரத்தக்கது.
சங்கத் தமிழிலக்கியங்களில் ஆரியர் என்பவர் யார்?
எட்டுத் தொகையிலும், பத்துப்பாட்டிலும், பதினெண்கீழ்க்கணக்கிலும் "ஆரியர்", "ஆரியன்", "ஆரிய", என்னும் சொற்கள் பல இடங்களில் பெயர்ச்சொற்களாகவும், உரிச்சொற்களாகவும் கையாளப்பட்டுள்ளன.
நற்றிணையின் 170ம் பாடல், வடதிசையிலிருந்து பெருகிவந்து தாக்கிய ஆரியப்படைகளை, மலையன் என்னும் சேரன் வென்றான் என்கிறது.
குறுந்தொகையின் 7ம் பாடல், தாளத்திற்கேற்பக் கயிற்றின் மீது நடக்கும் ஆரியக்கூத்தாடிகளைக் காட்டுகிறது.
பதிற்றுப்பத்தின் இரண்டாம்பத்தின் பதிகம், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயமலையில் தனது விற் சின்னத்தைப் பொறித்ததைப் புகழ்கிறது.
இதே இரண்டாம் பத்து, இமயம் ஆரிய முனிவர்களால் நிறைந்திருந்த செய்தியைக் கூறுகிறது.
ஐந்தாம்பத்து, கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனை வடவர் அஞ்சினர் என்கிறது.
அகநானூறில் ஆரியர்களைப் பற்றிய பல குறிப்புகளிருக்கின்றன. யானையை வசக்குவதில் ஆரியர் திறன்பெற்றிருந்தனர் என்கிறது. தஞ்சையின் வல்லம் என்ற இடத்தில், சோழர்கள் ஆரியர்களை வென்ற செய்தியைக் கூறுகிறது.
சேரன் செங்குட்டுவன், சீற்றம் மிகுந்த ஆரியர்களை வென்று இமயத்தில் விற்சின்னத்தைப் பொறித்தான் என்கிறார் பரணர்.
அகம்- 325 மற்றும் 386 ம் பாடல்கள் ஆரியப் பொருநன் என்ற மல்லனைப் பாணன் என்ற வடதமிழகத்தைச் சேர்ந்த மல்லனொருவன் வீழ்த்தினான் எனக் கூறுகின்றன.
புறநானூற்றின் 4ம் பாடல், சோழன் நலங்கிள்ளியை அஞ்சி ஆரியர் உறக்கமின்றி இரவுகளைக் கழித்தனர் என்கிறது.
தமிழக அரசர்களிடம் ஆரியர்கள் யானைப்பாகர்களாக இருந்த செய்தியை முல்லைப்பாட்டு கூறுகிறது.
இப்படிப் பல இடங்களில், சங்கநூல்கள் ஆரியர் என்பவர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.
மேலும், தமிழரல்லாத பிற வடபுல மன்னர்களைக் கோசர், வம்பமோரியர், நந்தர், தொண்டையர், வடுகர் எனச் சங்கநூல்கள் குறிப்பிடுகின்றன.
இவையல்லாது, சிலப்பதிகாரம் காட்சிக்காதை, கொங்கர், கலிங்கர், கொடுங்கருநாடர், பங்களர், கங்கர், பல்வேல் கட்டியர் மற்றும் வடஆரியரொடு போரிட்டுச் சேரன் செங்குட்டுவன் வென்றதாகப் போற்றுகிறது.
கால்கோள்காதை, ஆரிய அரசன் பாலகுமரன் மக்களாகிய கனக விசயரைக் கங்கையின் வடபால் களம்கண்ட செங்குட்டுவன்,
"அடுந்தேர்த்தானை ஆரிய வரசர்
கடும்படை மாக்களைக் கொன்று களம்குவித்து",
"எருமைக் கரும்பரி ஊர்வோன் உயிர்த்தொகை
ஒருபகல் எல்லையின் உண்ணும் என்பது
ஆரிய வரசர் அமர்களத் தறிய",ச் செய்தான் என்கிறது.
சங்கநூல்கள் மற்றும் சிலப்பதிகாரத்தில், தமிழக மன்னர்கள், குறிப்பாகச் சேர மன்னர்கள் ஆரியர்களுடன் போரிட்டமையே ஆரியர் பற்றிய செய்திகளாக நமக்குக் கிடைக்கின்றன. (இன்றைய கேரளம் பண்டைய சேரநாடு என்பதையும், அன்று அது தமிழ் வழங்கும் தேசமாக இருந்தது என்பதையும், நம்பூதிரி பிராமணர்களின் இடையறாத ஊடுருவலே பின்னாட்களில் தமிழும், சமஸ்கிருதமும் கலந்த மலையாள மொழி உருவாகக் காரணமானது என்பதையும் மனங்கொள்க.)
வெறுமனே தமிழகத்திற்கு வடக்கே இருந்தவர்களையெல்லாம் ஆரியர் என்று பண்டைய தமிழ் இலக்கியங்கள் குறிப்பிட்டுவிடவில்லை. கொங்கணர், கோசர், நந்தர், மோரியர், கருநாடர், கலிங்கர், பங்களர், கங்கர், கட்டியர், வட ஆரியர் என்று தமிழகத்தின் வடபுலம் ஆட்சிபுரிந்தோர்களைத் தெளிவாகவே வேறுபடுத்திக் குறிப்பிடுகின்றன. தமிழகத்தில் யானைப் பாகர்களாக, மல்லர்களாக, ஆரியக்கூத்தர்களாக விளங்கிய ஆரியர்களைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளதை முன்னரே பார்த்தோம். கங்கைச் சமவெளிக்கும் இமயமலைக்கும் இடையிலிருந்தவர்கள் ஆரியர்கள் என்று தெளிவாகவே குறிப்பிடுகின்றன.
மனுஸ்மிருதி வரையறுக்கும் ஆரியர்களும், பண்டைய தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் ஆரியர்களும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெளிவு. அதாவது ஆரியர்கள், ஆரியவர்த்தத்தைச் சேர்ந்தவர்கள்.
சரி. ஆரியம் என்பது பற்றிப் பார்த்தாகிவிட்டது. ஆரியத்தின் எதிரிடையான திராவிடம் என்பது என்ன என்று பார்ப்போமா?
திராவிடம் என்பது என்ன? திராவிடர்கள் என்போர் யார்?
பண்டைய தமிழ் இலக்கியங்களில் "திராவிடம்", என்ற சொல் பயின்று வந்ததில்லை. ஓருங்கிணைந்த தமிழகம் என்ற ஒன்று அன்று இருக்கவுமில்லை. தமக்கு முன்பிருந்த பற்பல இனக்குழுக்களையும், சிற்றரசுகளையும் வென்று நிலைபெற்ற சேர, சோழ, பாண்டிய நாடுகளாகத்தான் சங்ககாலத்திய, சங்கம் மருவிய காலத்திய தமிழகம் இருந்தது. வரலாற்றுக்காலமெங்கும் தமிழ் வழங்கிய நிலத்தின் இம்மூன்று குடிகளும் தம்முள் மாறுபட்டுப் போர் செய்து கொண்டேதானிருந்திருக்கின்றன. தங்களைத் தமிழர், என்று கூறிக்கொள்வதைக் காட்டிலும், சேரர், சோழர், பாண்டியர் என்று கூறிக்கொள்வதிலேயே அவர்கள் பெருமை கொண்டிருந்தனர். சங்க நூல்களில் தெறிக்கும் ரத்தத்தின் பெரும்பகுதி தமிழ் மன்னர்களாகிய சேர, சோழ, பாண்டியர்களுக்கிடையே நடந்த போர்களின் விளைவெனின் மிகையன்று.
தமிழ் வழங்கிய நிலத்தின்-தமிழகத்தின் எல்லைகளைக் குறிப்பிடும் பனம்பாரனாரின் தொல்காப்பியப் பாயிரம், "வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல் உலகம்", என்கிறது. அரபிக்கடலுக்கும், வங்கக்கடலுக்கும் இடைப்பட்ட, வடவேங்கடத்திற்கும் (இன்றைய திருப்பதி) தென்குமரிக்கும் இடைப்பட்ட நிலத்திலேயே தமிழ் வழங்கியது என்கிறது. (இன்றைய கேரளமே அன்றைய சேரநாடு என்பதும், 9ம் நூற்றாண்டுவரை அங்கே தமிழ் மொழியே வழங்கிலிருந்தது என்பதும் நாம் அறிந்ததே.)
இயற்சொல்லைக் குறிக்குமிடத்து, தொல்காப்பியரும், "இயற்சொல் தாமே செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி", என்கிறார். அதாவது, செந்தமிழ் பேசப்படும் நிலத்தில் வழங்கும் சொல்லே இயற்சொல் என்கிறார்.
திசைச்சொல்லை விளக்குமிடத்து, "செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்", எனப் பிரித்துக் கூறுகிறார். தமிழ்கூறும் உலகைச் சூழ்ந்துள்ள, செந்தமிழ் கலந்த வேற்று மொழிகள் பேசப்படும் பன்னிரண்டு நாடுகளைச் சேர்ந்த சொற்கள் தமிழில் வந்து வழங்கும் பொழுது அவை திசைச் சொற்கள் என்கிறார்.
செந்தமிழ் கலந்த வேற்றுமொழிகள் பேசப்படும் நாடுகள் தமிழகத்தின் வடபகுதியிலிருந்தன என்பது தெளிவு. தமிழகத்தின் வடபகுதியிலிருந்த தேயத்தவரைக், கோசர், மோரியர், நந்தர், தொண்டையர், வடுகர் என்று சங்க இலக்கியங்களும், கொங்கணர், கலிங்கர், கருநாடர், பங்களர், கங்கர், கட்டியர், ஆரியர் என்று சிலப்பதிகாரமும் குறிப்பிடுகின்றனவேயன்றி, ஓரிடத்தும் திராவிடர் என்று குறிப்பிடவில்லை.
பண்டைய தமிழ் இலக்கியங்களில் எவ்விடத்திலும் "திராவிடர்", என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. வடுகர்களாகிய தெலுங்கர்களையும், கன்னடர்களையும் வடுகர், கருநாடர் என்று குறித்தனவேயன்றித் "திராவிடர்", எனக் குறித்ததில்லை.
ஆனால், சமஸ்கிருத மற்றும் பாலி மொழி நூல்கள், முறையே "திராவிட", "தமேட", என்ற சொற்களைப் பல இடங்களில் பயன்படுத்தியிருக்கினாறன.
ருக் வேதத்தில் "திராவிட", என்னும் சொல் பயன்படுத்தப்படவில்லை. ஆரியரல்லாத மிலேச்சர்களைத் "தஸ்யு", என்றே குறிக்கிறது.
புனிதச்சடங்குகளைச் செய்யாது வழுவியதாலும், பிராமணர்களைக் கலந்தாலோசித்து அவர்களின் ஆலோசனையை ஏற்று நடவாமையினாலும், சத்திரியக்குடியினராகிய பௌந்திரர்களும், சோழர்களும், திராவிடர்களும், காம்போஜர்களும், யவனர்களும், சகர்களும், பரதர்களும், பஹ்ல்வர்களும், கிணர்களும், கிரிதர்களும், தர்தரர்களும், சூத்திரநிலைக்குத் தாழ்ந்தார்கள் என்கிறது மனுஸ்மிருதி.
இன்னொரு ஸ்லோகத்தில், மேற்குறிப்பிட்ட குடிகள் யாவும் தஸ்யூக்கள் என்கிறது. அவர்கள், பிரம்மனின் முகம், தோள், வயிறு, பாதம் ஆகியவற்றிலிருந்து தோன்றாத தஸ்யூக்கள்-மிலேச்சர்கள் என்கிறது.
இவ்விடத்தில் நாம் கவனிக்கத்தக்க செய்தியொன்று உண்டு. சோழர்களும், திராவிடர்களும் வேறு வேறு என்கிறது மனுஸ்மிருதி. பாண்டியர்களையும், சேரர்களையும் இவ்விடத்தில் அது குறிப்பிடவில்லை. அப்படியென்றால், தமிழின் மூத்த குடிகளான பாண்டியர்களும், சேரர்களும் அன்று இருந்திருக்கவில்லையா அல்லது அவர்கள் பிராமணரின் அறிவுரைப்படி ஆட்சி செய்து சத்திரியர்களாகவே நீடித்ததால் குறிப்பிடப்படவில்லையா என்ற கேள்விகள் எழுகின்றன. இரண்டாவது, திராவிடர்கள் என்று இங்கு குறிப்பிடப்படுபவர் யார்?
மனுஸ்மிருதியில் இதற்குச் சரியான தெளிவைப் பெற இயலாவிட்டாலும், மகாபாரதத்தில் பெறமுடிகிறது. மனுஸ்மிருதியை வழிமொழியும் விதமாக மகாபாரதமும், திராவிட, கலிங்க, புலந்த, பௌந்ர, மற்றும் இன்னபிற தேசங்களை ஆண்ட சத்திரியர்கள் பிராமணர்களின் வழிகாட்டுதலை ஏற்காமையினால் தாழ்வுற்றுச் சூத்திர நிலையை அடைந்தனர் என்று கூறுகிறது. மேலும், ராஜசூய யாகத்தின் நிமித்தம், திராவிட, உத்ரகேரள, ஆந்திர, கர்நாடக மற்றும் கலிங்க ராஜியங்களைச் சகாதேவன் வென்றதாகவும் கூறுகிறது.
இன்னும் சில இடங்களில், "திராவிட" என்பதைத் தனிநாடாகவும் மகாபாரதம் குறிப்பிடுகிறது.
ஆகக், கேரளர்கள் (மகாபாரதம் இயற்றப்பட்ட காலத்தில் கேரளம் என்ற ஒரு தேசம் இருக்கவில்லை. சேரநாடாகவே இருந்தது. ஆரம்பகாலக் கல்வெட்டாராய்ச்சியாளர்கள் இதைக் கருத்தில் கொள்ளாது, வட இந்தியக் கல்வெட்டுகளில் இடம்பெற்றிருந்த "சேரலர்கள்", என்ற சொல்லை இன்றைய நடைமுறைப்படிக் "கேரளர்கள்" என்று தவறாகப் படிக்க ஆரம்பிக்க அதுவே பின்னாட்களில் நிலைபெற்றுவிட்டதாகக் கூறுவார்கள். மகாபாரத நூலுருவாக்கத்தின் பொழுதும் இதே போன்ற பிழை நேர்ந்திருக்கலாம். அல்லது நிலவியல் ரீதியில் தமிழகத்துடன் மிகவும் துண்டிக்கப்பட்டிருந்த சேரர்களை, அவர்கள் தமிழர்களாக இருந்தபோதும் கேரளர்கள் என்றே தனித்துவமாகத் தொன்றுதொட்டுக் குறிப்பிட்டும் வந்திருக்கலாம். எது எப்படியோ, சேரர்களைச் சேரர்களாகக் குறிப்பிடாமல் பிற்கால வழக்கப்படிக் கேரளர்கள் என்று மகாபாரதம் குறிப்பிடுவது ஆராய்ச்சிக்குரியது.) ஆந்திரர்கள், கர்நாடகர்கள் என்று தென்னிந்திய அரசுகளைத் தனித்தனியாகக் குறிப்பிடும் மகாபாரதம், பாண்டிய, சோழ அரசுகளை அவ்வப்பெயர்களால் குறிப்பிடாமல், "திராவிட" என்று பொதுவாகக் குறிப்பிடுகிறது. தமிழ் என்ற சொல், தமிழ்-தமிழ-த்ரமிள-த்ரமிட-த்ரவிட-த்ராவிட என்று வடமொழியில் திரிந்ததாகக் கூறப்படும் வாதத்திற்கு வலுச்சேர்ப்பதாகவே தமிழர்களைத் திராவிடர் என்று மகாபாரதம் கூறுகிறது. தமிள- தொமிள-தமேட என்று பாலிமொழி தமிழர்களைக் குறிப்பிடுவதுடன் ஒப்பு நோக்கும் பொழுது, தமிழர் என்பதையே வடமொழியில் "திராவிட", என்கின்றனர் என்பது தெளிவு.
பின்னர் ஏன் மனுஸ்மிருதி சோழர் வேறு திராவிடர் வேறு என்று கூறுகிறது? சோழர்கள், தங்களைச் சூரிய குலத் தோன்றல்களாக, சிபிச் சக்கரவர்த்தியின் வழி வந்தவர்களாக, மனுநீதி காக்கும் குடியினராகப் பெருமைப்பட்டுக்கொண்டவர்கள். அதாவது, பிராமண அறிவுரைகளின் படி ஆட்சி செய்தவர்கள். எனவே, அவர்களைத் தங்களவர்களாகவும், பிராமண அறிவுரையை ஏற்று நடவாத பாண்டிய, சேர இனத்தவரைத் திராவிடரென்றும் கூறியிருக்கலாம். (பின்னாட்களில், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதிகள் மதுரையை ஆண்டனர் என்பது வரலாறு. அதிகார வெறியில், போர்களத்தில் எப்பாடுபட்டேனும் வென்றே தீரவேண்டும் என்று பேராசைப்பட்ட தமிழக அரசர்கள், பார்ப்பன அறிவுரையின்படி வேள்விகள் செய்து அவர்களுக்குத் தேவதானங்களும், மங்கலங்களும் வாரி வழங்கிப்போற்றினர் என்பதற்குச் சங்க இலக்கியங்களே சான்று.)
மகாபாரதம், மேலும், ராஜ சூயத்தின்பொழுது சோழர்களும், பாண்டியர்களும் தங்கம், சந்தனம், அகில் உள்ளிட்ட பரிசுப்பொருள்களை யுதிஷ்ட்ரனுக்குக் கொடுத்ததாகக் கூறுகிறது.
திரௌபதி சுயம்வரத்தில், கலிங்க, வங்க அரசர்களுடன் பாண்டிய அரசனும் பங்கு பெற்றான் என்று குறிப்பாகக் கூறுகிறது.
இன்னொரு இடத்தில், ஆந்திரர்களும், திராவிடர்களும், சிங்களர்களும் ராஜசூயத்தில் பங்கேற்றதாகக் கூறுகிறது. மேலுமொரு இடத்தில், சோழர்களும், திராவிடர்களும், அந்தகர்களும் பங்குபெற்றதாகக் குறிப்பிடுகிறது.
அர்ஜூனன் தென்கடலை நோக்கிச் சென்று, அங்கிருந்த திராவிடர்கள், ஆந்திரர்கள் மற்றும் கொடிய மகிஷகர்கள் (மைசூர்க்காரர்கள்) மற்றும் மலைவாழ் குடியினரான கொள்வர்களுடனும் போரிட்டதாகவும் கூறுகிறது.
மகாபாரதப் போரில் பாண்டவப்படைகளுக்கு உணவளித்த சேரனைப் பெருஞ்சோற்று உதியன் என்கிறது புறநானூறு.
பாண்டவர்களுக்காக திராவிட, குண்டல, ஆந்திரர்கள் போரிட்டனரென்றும், கௌரவர்களுக்காகக் காம்போஜ, சக, சால்வ, மத்ஸ், மிலேச்ச, புலிந்த, திராவிட, ஆந்திர மற்றும் காஞ்சிப் படைகள் போரிட்டனவென்றும் கூறுகிறது. குருக்ஷேத்திரப் போரில் இரு அணியிலும் திராவிடப் படைகள் பங்குபெற்றதாகவே மகாபாரதம் கூறுகிறது.
ஓரிடத்தில், திராவிட, சோழ, கேரள, மற்றும் ஆந்திரர்கள் திருஷ்டத்யும்னனைத் துணை செய்தார்கள் என்று குழப்பவும் தவறவில்லை.
இன்னோரிடத்தில், திராவிட, அந்தக, நிஷதக் காலாட்படைகள் சாத்யகியின் ஆணைக்கிணங்கிக் கர்ணனை எதிர்த்துப் போரிட்டனர் என்கிறது.
மிகச் சில இடங்களில், திராவிடர் என்பவர்களைப் பாண்டியர், சோழர் அல்லாதவர் போல் குறிப்பிட்டாலும் பல இடங்களிலும் பாண்டியர்களையும், சோழர்களையும் (அதாவது, தமிழக மன்னர்களைக்) குறிப்பதாகவே திராவிடர் என்ற சொல்லை மகாபாரதம் பயன்படுத்தியிருக்கிறது.
ஆக, மனுஸ்மிருதியிலோ மகாபாரதத்திலோ, "திராவிட", என்னும் சொல், சோழ, பாண்டியர்களாகிய தமிழர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறதேயன்றித், தமிழர், கேரளர், ஆந்திரர், கன்னடராகிய தென்னிந்தியர்களை ஒட்டுமொத்தமாகக் குறிப்பிடுவதற்காக அல்ல. திராவிடர் என ஆரிய நூல்கள் குறிப்பிடுவது தமிழரையே.
தனது சௌந்தர்ய லகரியில் "திராவிடசிசு", என்கிறார் ஆதிசங்கரர். அப்படி அவர் குறிப்பிடுவது திருஞானசம்பந்தரையே என்று சிலரும், இல்லையில்லை தன்னைத்தான் அவர் அப்படிக் குறிப்பிட்டுக்கொள்கிறார் என்று சிலரும் அபிப்ராயப்படுகிறார்கள். எது எப்படியோ, இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களே. "தமிழ்க்குழந்தை", என்பதையே "திராவிடசிசு", என்று ஆதிசங்கரர் குறிப்பிடுகிறார் என்பதில் ஐயமில்லை.
திருநாவுக்கரசரும் தனது திருமறைக்காட்டுத் திருத்தாண்டகத்தில், "ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்", என்று சிவனைக் குறிப்பிட்டிருக்கிறார். "ஆரியன் கண்டாய் திராவிடன் கண்டாய்", என்று குறிப்பிடவில்லை. தமிழர்கள் தங்களைத் தமிழர்களென்றே குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆரியர்களே தமிழர்களைத் திராவிடர் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
ஒரு சிலர் "திராவிட", என்ற சொல் ஆரியர்களையே குறிக்கிறது. பிராமணர்களின் இரு பெரும் பிரிவுகளைக் கூறுமிடத்துத் தனது ராஜதரங்கிணியில் பஞ்சதிராவிடா, பஞ்சகௌடா என்றே கல்ஹனர் கூறியிருக்கின்றார். எனவே திராவிட என்னும் சொல் ஆரியர்களாகிய பிராமணர்களையே குறிக்கிறது என்கிறார்கள். பஞ்சதிராவிட தேசங்களாகக் குறிப்பிடப்படுபவை, கன்னட, திராவிட, தெலுங்க, மகாராஷ்ட்ர, குஜராத் தேசங்களே. இங்கே திராவிட எனக் குறிக்கப்படும் தேசம் தமிழகமே என்பது தெளிவு. மேற்குறிப்பிட்ட நான்கு தேசத்து மொழிகளும் தமிழினின்று கிளைத்தன என்பதால் அவை மொத்தமாகப் பஞ்சதிராவிட தேசங்கள் எனக்குறிப்பிடப்பட்டிருக்கலாம்.
இவையன்றி மேலும் பல சான்றுகள் "திராவிட", என்னும் சொல்லுக்குத் "தமிழ்" என்னும் பொருள் தருவனவாகவே உள்ளன. நாலாயிரத்திவ்வியப்பிரபந்தம் "திராவிடவேதம்", என்று வைணவர்களால் போற்றப்படுகிறது. இங்கே, "திராவிடவேதம்" என்பது "தமிழ்வேதம்" என்பதாகவே பொருள் தருகிறது. "கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு உள்ளிட்ட மொழிகளின் வேதம்", என்னும் பொருளில் அல்ல.
சமஸ்கிருத வேதபாராயணங்கள் முடிந்த பின்னரே ஓதுவார்கள் பஞ்சபுராணம் பாட அனுமதிக்கப்படுகிறார்கள். இதைச் சிவனுக்கு அறிவிக்குமுகமாக, "திராவிட வேதப்ரியா, திராவிடகானப்ரியா, திராவிடவேதம் சமர்ப்பயாமி", என்று சிவாச்சாரியார்கள் கூறுகிறார்கள். இங்கேயும் திராவிட வேதம் என்று கூறப்படுபவை பன்னிருதிருமுறைகளே. இவையாவும் தமிழ்மொழியிலமைந்தனவேயன்றிக் கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு உள்ளிட்ட மொழிகளில் அல்ல.
எனவே, ஆரியர்கள் "திராவிட", என்று குறிப்பிடுவது தமிழ் மொழியையே என்பது திண்ணம்.
அப்படியென்றால், தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளைத் திராவிட மொழிகள் என்கிறாரே கால்ட்வெல்? ஏன்? எதற்காக?//

1 comment:

  1. ஐயா, ஆரியர் தான் தமிழ் என்பதை திராவிட என பிழையாக உச்சரித்தனர். அவ்வாறாயின் “திராவிட சிசு” என தன்னையோ திருஞான சம்மந்தரையோ அழைத்த சங்கரர் தமிழரல்லாத ஆரியர் தானே

    ReplyDelete