Monday 18 September 2017

இலக்கியத்தில் தமிழ், தமிழர், தமிழ்நாடு எனும் சொற்கள்:

இலக்கியத்தில் தமிழ், தமிழர், தமிழ்நாடு எனும் சொற்கள்:
By Jose Kissinger
============================================================
தமிழ் எனும் சொல் பல இடங்களில் வருகிறது. 
முக்கியமானவை மட்டும் தருகிறேன்.
----
தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே
- புறநானூறு 58
அதூஉம் சாலும்நற் றமிழ்முழுது அறிதல்
- புறநானூறு 50 
தமிழ் வையைத் தண்ணம் புனல்
- பரிபாடல் 6
தள்ளாப் பொருள் இயல்பின் தண்டமிழ் ஆய்வந்திலார் கொள்ளார்
- பரிபாடல் 9
தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன்
- பரிபாடல் 4
__________________________________
தமிழர் :-
-------------
தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து
- புறநானூறு 19
(இருபுறமும் தமிழர் இறந்த தலையாலங்கான போர்)
மண்திணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர்
- புறநானூறு 35
(தமிழ்க் கிழவர் அதாவது தமிழ்த் தலைவர்)
தாதின் அனையர் தண்டதமிழ்க் குடிகள்
- பரிபாடல் 8
(தமிழ்க்குடிகள் அதாவது தமிழ் மக்கள்)
அருந்தமிழர் ஆற்றல் அறியாது போரிட்ட கனகவிசயரை
- சிலப்பதிகாரம், நீர்ப்படைக்காதை
தண்ணார மார்பிற் தமிழ்நர் பெருமானைக் கண்ணாரக் காண
- முத்தொள்ளாயிரம் 24
________________________________
தமிழர்நாடு :-
---------------------
தமிழர் ஆட்சி தமிழ்பேசாத நாடுகள் வரை பரவியிருந்தது,
தமிழ்கெழு மூவர் காக்கும் மொழிபெயர் தேஎத்த
- அகநானூறு 31
இமயமலை முதல் குமரிக்கடல் வரை தமிழ் பேசப்பட்டது,
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து
- தொல்காப்பிய சிறப்புப் பாயிரம் 
தமிழரின் நாடு 'தண்டமிழ்' (தண்+தமிழ், தண்=குளிர்ச்சி) என்ற சொல்லால் குறிக்கப்பட்டுள்ளது.
தண்டமிழ் வேலித் தமிழ்நாட்டகம் எல்லாம்
- பரிபாடல் 9
தண்டமிழ் பொதுஎனப் பொறாஅன்
- புறநானூறு 51
(தமிழ்நாடு எல்லாருக்கும் பொது என்றால் பொறுக்கமாட்டானாம்.
தனக்குத்தான் அது சொந்தம் என்பானாம்)
கொண்டி மிகைப்படத் தண்டமிழ் செறித்துக்
- பதிற்றுப்பத்து 63
(செல்வம் பெருகிட தமிழர்நாட்டை இறுக்கி அதாவது சேர்த்து)
தமிழகப்படுத்த இமிழிசை முரசின்
- அகநானூறு 227
(தமிழகம் எனும் சொல்)
இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறியத் தமிழ்முழுது அறிந்த
- சிலப்பதிகாரம், அரங்கேற்று காதை (வரைப்பு அதாவது எல்லை)
நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் தமிழ்வரம்பு அறுத்த
தண்புனல் நல்நாட்டு
- சிலப்பதிகாரம், வேனில் காதை
(வரம்பு அதாவது எல்லை)
தென்தமிழ் நன்னாட்டு தீதுதீர் மதுரைக்கு
- சிலப்பதிகாரம், நாடுகாண் காதை
இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடாக்கிய
- சிலப்பதிகாரம், காட்சிக் காதை
குமரி வேங்கடங் குணகுட கடலா
மண்டினி மருங்கில் தண்டமிழ் வரைப்பின் செந்தமிழ் கொடுந்தமி ழென்றிரு பகுதியின்
- சிலப்பதிகாரம், நூற்கட்டுரை
தண்டமிழ் கோள்நிலை திரிந்து கோடை நீடினும் தான் நிலைதிரியாத் தண்டமிழ் பாவை
- மணிமேகலை
(தமிழர்நாட்டு காலநிலை மாறி கோடை நீண்டாலும் தன் இயல்பு மாறாத தமிழ்ப்பெண் காவிரி)

No comments:

Post a Comment