ஒரு காலத்தில் இந்தத் துணைக் கண்டம் முழுதும் தமிழே பேச்சு மொழியாகவும் எழுத்து மொழியாகவும் இருந்து வந்தது . ஆரியர் நுழைவுக்குப் பின்னர் அவர்களுடைய வேத மொழியும் தமிழும் கலந்து பல வட்டார மொழிகள் வடக்குப் பகுதியில் உருவாயின. புத்தர் காலத்திற்குப் பிறகு சமஸ்கிருதம் என்ற மொழி செயற்கையாக தமிழ் எழுத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது . அதன் பிறகு சமஸ்கிருதத்திற்கு முன்னர் உருவான வடக்குப் பகுதி வட்டார மொழிகள் பிராகிருதங்கள் என்று பன்மையில் அழைக்கப்பட்டன. அந்தக் காலகட்டத்தில் தான் தமிழ் என்ற சொல் வேத மொழியுடன் பி திரிந்து திராவிடம் என்று ஆகியது. இந்த வரலாற்று உண்மைகள் இதே வலைதளத்தில் பல கட்டுரைகளில் விரிவாகத் தரப்பெற்றுள்ளன. பின்னர் காலப்போக்கில் தென்பகுதியில் உள்ள மொழிகளை மட்டுமே ஒட்டுமொத்தமாக திராவிட மொழிகள் என்று சுட்டிக்காட்டத் தொடங்கினர். அவற்றில் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகியவை முறையே 9, 10, 11 ஆம் நூற்றாண்டுகளில் உருவாயின என்ற விவரங்கள் இதே வலைதளத்தில் தரப்பெற்றுள்ளன. அந்த மூன்று மொழிகளில் உள்ள இலக்கியங்கள் உருவாக்கப்பட்ட காலகட்டங்களே அவை மூன்றும் அண்மைக்கால மொழிகள் என்ற உண்மையை என்றும் பறைசாற்றும்.
இந்தப் பின்னணியில் தமிழ்நாட்டில் ஒரு சிலர் திராவிடம் என்ற சொல்லை நாம் பயன்படுத்தக் கூடாது என்றும் தமிழர் என்ற சொல்லை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கூறி வருகின்றனர் . இதனுடைய எதிர்மறை விளைவுகள் தமிழர்களை, தமிழ் வரலாற்றை, பெரும் அளவுக்கு பாதிக்கும் என்பதை அவர்கள் அறிந்தாரில்லை.
பேராயர் ஹென்றி ஹேராஸ் முதலாக பல வரலாற்று அறிஞர்கள் சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரீகம் என்று சாற்றியும், அந்தத் திராவிடம் என்பது தமிழ் என்று நிறுவியும் உள்ளனர். அவர்கள் தங்கள் நூற்களில், திராவிடம் மற்றும் ஆரியம் என்ற சொற்களைப் பெருமளவு பயன்படுத்தித் தங்களுடைய ஆக்கங்களை உலகுக்குக் கொடுத்துச் சென்றுள்ளனர் இவர்களுடைய நூல்கள் உலகம் முழுவதும் வரலாற்று அறிஞர்களால் மிக ஆழ்ந்து படிக்கப் பெறுகின்றன. திராவிடத்திற்கும் தமிழுக்கும் இவர்கள் எந்த வேறுபாட்டையும் காட்டவில்லை.இன்று அரசியல் காரணங்களுக்காக, திராவிடம் என்ற சொல்லைத் தமிழர்கள் கைவிடுவோமானால், நாம் வீணாக ஆரியம் விரித்த வலையில் வீழ்வோம். ஆரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றிய அரசின் சதிகளாலும், அவர்கள் விருப்பப்படி தமிழ்நாட்டைக் குதறி வைத்த ம.கோ.இராமச்சந்திரன், ஜெயலலிதா ஆகிய இருவரின் பல தமிழ் விரோதச் செயல்களாலும், வலுவிழந்து நிற்கும் தமிழ் நாட்டை, இன்றைய மலையாளிகளும், கன்னடர்களும், தெலுங்கர்களும் மதிக்க விரும்புவதில்லை. இவர்கள் இன்று தமிழ் நாட்டில் உள்ள சிலர் நாம் தமிழர்கள்தாம், திராவிடர்கள் அல்லர் என்று சொன்னோமானால் அதற்காக மிகவும் மகிழ்ச்சியே அடைவர்.
இற்றைத் தமிழர்கள் மீது அரசியல் காரணங்களால் அவர்களுக்கு, அதாவது தெலுங்கர், கன்னடர் மற்றும் மலையாளிகள் ஆகிய மூவருக்கும், உள்ள வெறுப்பு உணர்வால், சிந்து சமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் என்ற உண்மையை அவர்களில் பெரும்பாலோர் மகிழ்ச்சியோடு ஏற்பதில்லை. அந்த நாகரிகம் தமிழர் நாகரிகம் அல்ல என்றும் தமிழுக்கு முன் இருந்த மொழி (Proto-Tamil or Proto-Dravidian) என்றும் வீம்புக்குப் பரப்புரை செய்ய அவர்களில் சிலர் முயலுகின்றனர். அப்போதுதான் அவர்களுடைய மொழிவழிப் பெருமை காக்கப்படும் என்று அவர்கள் நினைக்கின்றனர்.
தமிழர்கள் திராவிடர் அல்லர் என்று தமிழ்நாட்டு மக்கள் கொள்கை முடிவு எடுப்பார்களேயானால, சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்று சொல்லியிருக்கும் ஆய்வுக்கட்டுரைகளைக் காட்டி அவர்கள், தமிழுக்கும் சிந்துவெளி நாகரிகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், சிந்து வெளி மக்கள் பேசிய மொழி தமிழுக்கு முன்பிருந்த மொழி என்று வெகு தீவிரமாகப் பரப்புரை செய்வர். உலகெங்கும் பரவியுள்ள அறிஞர் பெருமக்கள் நிறுவியுள்ள தமிழ் வரலாற்று உண்மைகளைத் தமிழர்கள் ஒரே நொடியில் இழக்க நேரிடும்.
மேல் விவங்களுக்கு:
1. Tamil Vs.Sanskrit - Part 2.
https://vaeyurutholibangan.blogspot.com/2014/08/tamil-vs-sanskrit-part-ii.html
2.Worship of Lord Siva: Exclusively Dravidian!
https://vaeyurutholibangan.blogspot.com/2014/08/worship-of-lord-siva-exclusively.html
3.வாழிய செந்தமிழ்!
https://vaeyurutholibangan.blogspot.com/2014/10/blog-post_90.html
4.மொழி வரலாறு, குழந்தைகளுக்கு !
https://vaeyurutholibangan.blogspot.com/2014/10/blog-post_27.html
5.சிந்துவெளி தீரத்துச் செந்தமிழே !
https://vaeyurutholibangan.blogspot.com/2015/09/blog-post.html
6. திராவிடர், ஆரியர் - சொற்கள் பயன்பாடு - சத்தியப்பெருமாள் பாலுசாமி
https://vaeyurutholibangan.blogspot.com/2015/05/blog-post.html
7.Tamil - Dramila - Dravida
https://vaeyurutholibangan.blogspot.com/2016/10/tamil-dramila-dravida.html
8. திராவிடம்: தாயுமானவர் கையாளும் சொல்! - அரிகரன்
https://vaeyurutholibangan.blogspot.com/2016/08/blog-post.html
9. இலக்கியத்தில் தமிழ், தமிழர், தமிழ்நாடு எனும் சொற்கள்: By Jose Kissinger
https://vaeyurutholibangan.blogspot.com/2017/09/blog-post.html
10.'Dravida' refers to Tamil in Rajatarangini of c. 1128 AD
https://vaeyurutholibangan.blogspot.com/2017/03/dravida-refers-to-tamil-in.html