Tuesday 21 October 2014

தமிழா! பொங்கலே புத்தாண்டு!! கடத்தல்காரர்களிடம் ஏமாறாதே!!!




தமிழ் ஆண்டு என்பது முற்காலத்தில் சுறவம் (தை) மாதத்தின் முதல் நாளில் தொடங்குவதாக அமைந்திருந்தது. தமிழ் மரபின்படி மாதங்கள் ஓரைப் பெயர்களால் குறிப்பிடப்பெற்றன என்பது பாவாணர் அவர்களின் ஆய்வின் வழி விளங்குகிறது. 

இம்மரபு, காலப்போக்கில் ஆரியர்கள் பல்வேறு துறைகளில் கரவெண்ணத்தோடு திட்டமிட்டு மொழிமாற்றம் செய்தபோது அவர்களின் சதிச்செயலால் பாதிப்பிற்காளானது. அன்றுமுதல் சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாளாக மாற்றப்பட்டது. தென் தமிழ் நிலத்தினை பல வகைகளில் பிரித்து, அப்பகுதிகளில் வழங்கிவந்த தமிழை, தெலுங்கு, பின்னர் கன்னடம், அதன் பின் மலையாளம் என்று பிரித்துவிட்டபின், அனைத்துத் துறைகளிலும் பெயரை வடமொழியில் மாற்றிவிட்டு, வடமொழிதான் எங்கும் இருந்தது, வடமொழியே எதிலும் உயர்ந்தது என்ற தோற்றத்தை ஏற்படுத்தி வரலாற்றைத் திரிக்கும் வேலையை ஆரியர் மும்முரமாகச் செய்துகொண்டிருந்தனர். கடந்த காலத்தை மாற்றக் கடவுளாலும் முடியாது என்பது வரலாற்றறிஞர் கூற்று. ஆனால், இந்திய ஆரியர்கள் கடவுளைவிட மேலானவர்களாயிற்றே. கடவுளையே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்கள் என்று ஆணவத்துடன் அறைகூவியவர்களாயிற்றே. 'ப்ரம்மன மம தேவதா' என்றல்லவா சொல்லிக் கொண்டார்கள். எனவே, வரலாற்றை மாற்ற அவர்களால் முடியாதா என்ன? செய்தார்கள். இந்நாளில் கூடத் தொடர்ந்து அச் சதியைச் செய்ய முயலுகின்றார்கள்.  ஒரு குமுகாயத்தின் மீது தமது வல்லாண்மையைச் செலுத்த மிக எளிய வழி, அக் குமுகாயத்தின் மரபுகளையும், பண்பாடுகளையும், அம்மொழியில் உள்ள பெயர்ச் சொற்களையும் மொழிமாற்றம் செய்து கடத்திச் செல்வதேயாகும். இந்தக் கடத்தல் வேலையை உட்கார்ந்து திட்டமிட்டு நிறைவேற்றினர், அன்றைய ஆரியர். It was a typical Aryan hijack.

இசை கடத்தல்:

தமிழ் இசையை ஆரியமாக்க, தமிழ்ப் பண்களின் பெயர்களை வடமொழிப் பெயர்களாக மாற்றினார்கள்.  இசையை இழிந்துரைத்த ஆரியர், இசையின் வலிமை தெரிந்தபின்னர், தமிழரின் இசையைப் பறித்துத் தமதாக்கிக்கொண்டு தமிழருக்கு மறுத்தார்கள். 

ஊர்ப் பெயர் கடத்தல்: 

ஊர்களின் பெயர்களையெல்லாம், வடமொழியில் மாற்றினர். மான்கள் உள்ள காடு என்ற பொருள்கொண்ட திருமரைக்காட்டினை, திருமறைக்காடு என்று நினைத்து வேதாரண்யம் என்று பெயர் மாற்றம் செய்தனர். திருக்கழுங்குன்றம் என்ற பெயரை பக்‌ஷிதீர்த்தம் என்றும், திருவானைக்கா என்ற பெயரை ஜம்புகேஸ்வரம் என்றும், மயிலாடுதுறையை மாயூரம் என்றும், குடந்தையைக் கும்பகோணம் என்றும், திருவரங்கத்தை ஶ்ரீரங்கம் என்றும், திருவில்லிபுத்தூரை ஶ்ரீவில்லிபுத்தூர் என்றும், பொன்னம்பலத்தைக் கனகசபையென்றும், திருமுதுகுன்றத்தை விருத்தாசலம் என்றும் மாற்றித் தமிழர் வரலாற்றையும் தமிழரையும் ஏமாற்ற முயன்றனர். 

சமயப் பெயர்ச்சொல் கடத்தல்:

தாயுமானவனை மாத்ருபூதம் என்றும், முருகனை சுப்ரமணியன் என்றும், கருந்தார்க்குழலி அம்மையைச் சூலிகாம்பாள் என்றும், (திரு+கரு+கா+ஊர்) கருகாக்குமம்மையை கர்பரக்‌ஷாம்பிகா என்றும், தாயம்மையை ஜகதாம்பிகா என்றும், மாணிக்கவண்ணரை இரத்தினகிரீஸ்வரர் என்றும், வண்டுவார் குழலியை ஆமோதாளக நாயகி என்றும், பழமலை நாதரை விருதகிரீஸ்வரர் என்றும், மரைக்காடரை வேதாரண்யர் என்றும் யாழைப்பழித்தமொழியம்மையை வேத நாயகி என்றும், திருத்தாளமுடையாரை சப்தபுரீஸ்வரர் என்றும், ஓசைகொடுத்த நாயகியம்மையை தொனிப்ரதாம்பாள் என்றும், தமிழ்க் கோயில்களில் உள்ள கடவுளர் பெயர்கள் அனைத்தையும் திட்டமிட்டுக் தீயெண்ணத்தோடு மொழி மாற்றம் செய்தனர். கோயில் 'ஆலய'மானது. கோயில் மரம் ஸ்தல விருக்ஷமானது. 

தமிழ் நாட்டில் 11-ஆம் நூற்றாண்டின் போது கோயில்களில் தமிழ் தெரியாத வடமொழி மட்டுமே அறிந்த ஆரியர் பெருமளவில் பூசகர் பதவியை ஆக்கிரமித்தனர்.(அதியமான்கள்-ஔவை துரைசாமி- 1962 - தமிழர் சரித்திரம் - ந. கந்தையா- பக்கல்- 93 -1964).  இது வடமொழியே வழிபாட்டு மொழியாக மாற மேலும் ஏந்தாயிற்று. உருவ வழிபாட்டுக்குச் சற்றும் தொடர்பில்லாத ஆரியர்கள், தமிழர் கோயில்களில் புகுந்துகொண்டு தமிழ்ப்பெயர்களை வடமொழியில் மாற்றம் செய்துவிட்டு, தமிழ்ச் சமயத்தையே கடத்திக் கொண்டு போயினர். இன்றுவரை, அதில் தமது வல்லாண்மையை தளர்த்திக் கொள்ள அவர்கள் அணியமாயில்லை. இனவேறுபாட்டைத் (Apartheid) தீவிரமாகக் கடைபிடிக்கின்றனர்.

இவர்களுடைய மொழி வழி ஆக்கிரமிப்பு முயற்சியால், கோயில் என்ற சொல்லின் மகிமை போய், 'இடம்' என்ற பொருளைக் குறிக்கும் ஆலயம் என்ற சொல் வழக்கில் கொணரப் பட்டது. போஜனாலய என்றால் உணவு உண்ணும் இடம், ஷௌச்சாலய என்றால் கழிவறை. இது தெரியாத தமிழ்ப் புலவர், 'ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்று சொல்லிப் போந்தார். 

பொருள்களின் பெயர்ச்சொல் கடத்தல்: 

சோறு சாதமானது. சாறு இரசமானது. சீரகம் ஜீரகமானது. புதுமனை புகுவிழா கிரகப்பிரவேசமானது. இருக்கை ஆசனமானது. உணவு போசனமானது.  இன்ன பிற, இன்ன பிற. 

நாள், கிழமை, மாதம், ஆண்டுப் பெயர் கடத்தல்:

தமிழர் பெரிதும் கடற்பயணம் செய்தனர். பயண காலங்களில் மாலுமிகள் விண்மீன்களையும் திங்களையும் நோக்கித் திசை அறிந்து மரக்கலங்களைச் செலுத்தினர். வானத்தை நோக்கி நேரம் கணிக்கவும் பயின்றிருந்தனர். நிலவின் இயக்கத்தைக் கொண்டு மாதங்களைக் கணக்கிட்டனர். (அக நானூறு -255 - தமிழர் சரித்திரம் - ந. கந்தையா - பக்கல் - 169). "பிராமணர்களின் தொடர்பு ஏற்படுவதன் முன் தமிழர் மிகத் திருந்திய வான ஆராய்ச்சி அறிவைப் பெற்றிருந்தனர்" (பக்கல் - 169 - தமிழர் சரித்திரம் - ந. கந்தையா). 

"மதி என்றால் அளவு. கால அளவைக் கணிக்க நிலவு உதவியதால் தமிழர் அதனை மதி என்றனர். ஒரு முழுமதிக்கும் இன்னொரு முழுமதிக்கும் இடையில் உள்ள காலம் மாதம் என்றும் திங்கள் என்றும் வழங்கப்பட்டது." இது ஆரியர்களால் மாசம் என்றாக்கப் பட்டது. "வளர்பிறை நாட்களை ஒளிப்பக்கம் என்றும் தேய்பிறை நாட்களை இருட்பக்கம் என்றும் சிலப்பதிகாரம் (23:133) கூறும். இவைதான், சுக்கில பக்ஷம் என்றும் கிருஷ்ண பக்ஷம் என்றும் மொழிபெயர்க்கப்பட்டன.".தமிழில் வழங்கிய மாதப்பெயர்கள் ஓரைப் பெயர்கள் ஆகும். இவை சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, இரட்டை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை ஆகியவையாகும். இப் பெயர் மரபு, சூடாமணி நிகண்டில் பாடல் 64, 65, 66 ஆகியவற்றில் காணக் கிடைக்கின்றன.

ஒவ்வொரு நாளுக்குமான விண்மீன் பெயர்கள் சூடாமணி நிகண்டின் 67 முதல் 78 வரையிலான பாடல்களில் விரித்துரைக்கப்பட்டுள்ளன. அவை புரவி, அடுப்பு, ஆரல், சகடு, மான்றலை, மூதிரை, கழை, காற்குளம் முதலானவை ஆகும். இவற்றை ஆரியர் அஸ்வினி, பரணி, கார்த்திகை என்று மொழிக் கடத்தல் செய்து தமது கொடும் வல்லாண்மையை விரிவு படுத்திக் கொண்டனர். இன்றும் மலையாளத்தில் இப் பழந்தமிழ்ப் பெயர்கள் நின்று நிலவுவதைக் காணமுடிகிறது. 

"இவையெல்லாம் நமக்கு விளக்கமில்லாத காலத்தில், யார் யாரோ சொன்னதை நம்பினோம். இன்று, அறிவுக்கண் திறந்தபின் எண்ணிப் பார்க்க வேண்டாமா?" - பாவலரேறு. "வியாழன் இராசி வட்டத்தை ஐந்து முறை சுற்றி வருதலாகிய அறுபது ஆண்டுகள் கொண்ட கால அளவை ஆரியருக்குரியதன்று" என்று மக்ளீன் கூறுகிறார். ( Manual of Administration of Madras Presidency) ( பக்கல் - 169 - தமிழர் சரித்திரம் - ந. கந்தையா). ஆனால், இச் சுழற்சி முறையால், சித்திரையைப் புத்தாண்டு நாளாகக் கொண்டாடியது கிடையாது. சிலப்பதிகாரம் கூட இந்திர விழாவைத்தான் கூறுகிறது.  தமிழரின் புத்தாண்டு ஆவணியில் தொடங்கி ஆடியில் முடிந்ததாகவும் சில தமிழறிஞர்கள் கூறினர். இவை எல்லாவற்றையும் மறைமலை அடிகள் முதலான மூதறிஞர்கள் கூடி ஆராய்ந்ததன் பிறகே, பண்டைத் தமிழர் சுறவம் முதல் நாளினைத்தான் புத்தாண்டின் முதல் நாளாகக் கொண்டாடினர் என்று கண்டனர். சித்திரை முதல் நாள் வடவருக்குத்தான் புத்தாண்டு நாள். அதனால்தான், ஆரியர் அதையே நம் தலையிலும் கட்டி நம்மைத் தளைப் படுத்த முயன்றனர். 

"Never again shall we be enslaved" - Goethe

Acton says, “A nation deceived about its past can be easily manipulated in the present. Those who write the history books mould the thinking and set the agenda of the next generation (and sometimes a number of future generations). For this reason, one of the first things insurrectionists seek to do is re-write history from their own perspective.” இந்தியாவில், குறிப்பாகத் தமிழ் நாட்டில் இவ்வேலையை மிகத் தீவிரமாக ஆரியர் செய்தனர். செய்துகொண்டிருக்கின்றனர்.

தமிழா! சுறவம் (தை) முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாள்! இதைக் கொண்டாடுவது உன் அடிப்படை உரிமை !!! பிறப்புரிமை!!!!

ஆரியர்கள்  உன் நலனில் அக்கறை உள்ளவர்கள் அல்ல. இருந்தால், அனைத்துக் கோயில்களிலும் உன்னிடமிருந்து பறிக்கப்பட்ட பூசகன் வேலையை நீ மீண்டும் பார்க்க முயல்வதைக் கடுமையாக எதிர்ப்பதேன்? கொடுமையாகத் திட்டுவதேன்? விழித்துக் கொள்! காலங்காலத்திற்கு உன்னை அடிமையாக்க முயலும் ஆரியச் சதிக்குத் தொடர்ந்து இரையாகாதே! உனது பண்பாட்டை மறைமலை அடிகள், பாவாணர் முதலான உன் நலம் நாடுவோர் மூலம் அறிந்துகொள்! 

இனிய தமிழ்ப் புத்தாண்டு (பொங்கல் திருநாள்) நல் வாழ்த்துக்கள்!
============================================================

இது தொடர்பான இன்னொரு வரலாற்று உண்மை காண: 



6 comments:

  1. நண்பர் புலிவம்சம் இதுகுறித்து முகநூலில் எழுதியுள்ள அருமையான கட்டுரையைப் படிக்க, கீழுள்ள இணைப்பைச் சொடுக்கவும்:
    https://www.facebook.com/notes/737970912890607/?pnref=story

    ReplyDelete
  2. “எம் தமிழ் மொழி பேணி வருக நீ யாண்டும்;

    இழந்த நின் பேராற்றல் எழ அது தூண்டும்!”



    சங்க இலக்கியம் பத்துப்பாட்டில் வரும் ‘மதுரைக்காஞ்சி’யில், பாடல் அடி எண் 399 முதல் 429 வரை விளக்குவது என்ன?



    “பலர் தொகுபு இடித்த தாது உகு சுண்ணத்தர்,

    தகை செய் தீம் சேற்று இன்ன நீர்ப் பசுங் காய்,

    நீடு கொடி இலையினர், கோடு சுடு நூற்றினர்,

    இரு தலை வந்த பகை முனை கடுப்ப,

    இன் உயிர் அஞ்சி, இன்னா வெய்து உயிர்த்து,

    ஏங்குவனர் இருந்து, அவை நீங்கிய பின்றை,

    பல் வேறு பண்ணியம் தழீஇத் திரி விலைஞர்,

    மலை புரை மாடத்துக் கொழு நிழல் இருத்தர

    இருங் கடல் வான் கோடு புரைய, வாருற்றுப்

    பெரும் பின்னிட்ட வால் நரைக் கூந்தலர்,

    நன்னர் நலத்தர், தொல் முது பெண்டிர்

    சென் நீர்ப் பசும் பொன் புனைந்த பாவை

    செல் சுடர்ப் பசு வெயில் தோன்றியன்ன

    செய்யர், செயிர்த்த நோக்கினர், மடக் கண்,

    ஐஇய கலுழும் மாமையர், வை எயிற்று

    வார்த்த, வாயர், வணங்கு இறைப் பணைத் தோள்,

    சோர்ந்து உகுவன்ன வயக்குறு வந்திகை,

    தொய்யில் பொறித்த சுணங்கு எதிர் இள முலை,

    மை உக்கன்ன மொய் இருங் கூந்தல்,

    மயில் இயலோரும், மட மொழியோரும்,

    கைஇ, மெல்லிதின் ஒதுங்கி, கை எறிந்து,

    கல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்ப,

    புடை அமை பொலிந்த வகை அமை செப்பில்

    காமர் உருவின் தாம் வேண்டு பண்ணியம்

    கமழ நறும் பூவொடு மனைமனை மறுக

    மழை கொளக் குறையாது, புனல் புக மிகாது,

    கரை பொருது இரங்கும் முந்நீர் போல,

    கொளக் கொளக் குறையாது, தரத் தர மிகாது,

    கழுநீர் கொண்ட எழு நாள் அந்தி,

    ஆடு துவன்று விழவின், நாடு ஆர்த்தன்றே

    மாடம் பிறங்கிய மலி புகழ்க் கூடல்...



    புத்தாண்டு பிறப்பிற்காக, வீட்டிற்குச் சுண்ண வெள்ளை அடித்து,

    இல்லை, கோடி, தோரணம் போன்றவை கட்டி,

    பொங்கல் வைத்து,

    தெற்கே சென்று திரும்பியதற்காக கதிரவனுக்கு நன்றி கூறி வணங்கி வழிபட்டனர்.

    அவ்வாறு அவன் தெற்கே சென்று திரும்பாது போயின், இயற்கைப் பேரிடர் நேரும் என்று அஞ்சினர்.

    கதிரவன் தெற்கே சென்று திரும்பியதே (இவ்வுலகு ஆடித் திரும்புதல்) ‘ஆடு கோட்பாடு’ ஆகும்.

    அந்நாள், தைத்திங்கள் முதல் நாள்...

    ‘ஆடு துவன்று விழவு’ எனத் தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படும் அந்நாள், அந்தத் தைத் திங்கள் முதல் நாள், பெரும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது.





    இங்கே ‘துவன்று நிறைவு ஆகும்’ என்கிற பதம், தொல்காப்பியத்தில் 815இல் குறிப்ப்டப்பட்டுள்ளதும் சிறப்பே.





    பெருந்தச்சன் தென்னன் மெய்மன் அவர்கள் இதுகுறித்து உருவாக்கிய படப்படைப்பு:







    ஆக, தைத்திங்கள் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பது விளங்குகிறது. எனினும், இன்றைய கால கட்டத்தில், ஆங்கில நாள்காட்டியில் குறிப்பிட்டுள்ளபடி 365நாட்களால் கணக்கிடப்படுவதால், நம் தொன்மைச் சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ளபடியான நட்சத்திர நிகழ்வுகள் தள்ளிப் போகின்றன. அவ்வாறிருக்க, தமிழ் நாட்களையும் 365 நாட்களாகக் கணக்கிட்டுப் பார்ப்பதால் நாள் நட்சத்திரம் சேர்ந்து வராமல், ஏதேதோ நாட்களில் இவை வருவதால் காலக் கணிப்பிலும் பெருங் கோளாறு ஏற்படுகிறது.





    குறிப்பு: இது குறித்த ஆராய்ச்சியில் தன்னை முழுமையாய் ஈடுபடுத்திக்கொண்டுள்ள பெருந்தச்சன் தென்னன் மெய்மன் அவர்கள் வழிகாட்டுதலின்படி, ஆக்கப்பட்டுள்ளது.



    இதன் தொடர்ச்சியையும், இதுகுறித்த மேலும் பல செய்திகளையும் அடுத்து வரும் நாட்களில் அலசுவோம்.

    ReplyDelete
  3. மேலே தரப்பெற்றுள்ளது திரு. புலிவம்சம் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையின் ஒரு பகுதி.

    ReplyDelete
  4. நண்பரே, காலம் கடந்தே புலிவம்சத்தில் யாமளித்த எமது சிறு கட்டுரையைத் தாங்கள் இங்கே பகிர்ந்ததைக் கண்டோம். முதலில் அதற்கு யாம் நன்றி கூறினாலும், இவ்வளவு காலம் தாழ்த்தி இதனைக் கண்டமைக்குப் பொறுத்தருளுங்கள்.

    எமது இக்கட்டுரையில் குறிப்பிப்பிட்டுள்ள தகவல்களனைத்தும் பெருந்தச்சனார் திரு தென்னன் மெய்ம்மன் அவர்களால் ஆய்வு செய்யப்பட்டது என்பதனையும், அதன்வழியே யாமும் இக்கட்டுரையைச் செய்தோமென்பதையும் மெய்ம்மனாருக்கு நன்றி கூறுவதோடு தெரிவித்துக் கொள்கிறோம். இன்னும் இதுகுறித்துப் பற்பல ஆய்வுகள் தொடர்கின்றன. விரைவில் அவற்றையும் எமது புலிவம்சத்தில் அளிக்கவிருக்கிறோம் என்பதனையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவன்

    அன்புமிக

    நக்கீரன் பாலசுப்பிரமணியம்

    ReplyDelete
  5. தங்களின் இக்கட்டுரையின் இணைப்பையும், எமது முகநூற் பக்கத்தில் அனைவரும் அறியப் பதிகிறோம்.

    ReplyDelete
  6. http://muelangovan.blogspot.in/search?q=திருவள்ளுவர்+திருநாள்

    ReplyDelete